

புத்ரா ஜெயா ஜூன் 9-
பேராக் மாநிலத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் தற்போது இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது.
செம்பனை மரங்கள் நிறைந்த இந்த நிலத்தை சுத்தப்படுத்த மற்றும் வேலி சுவர் எழுப்ப மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் ஒரு லட்சம் வெள்ளி மானியம் வழங்க முன் வந்துள்ளார்.
இன்று மனிதவள அமைச்சர் சிவகுமாரை ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி வாரியத் தலைவர் மனஹரன், பள்ளி வாரிய மேலாளர் பாலகிருஷ்ணன், பள்ளி அறங்காவலர் மோகன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினர்.
ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1938 ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளி தோன்றி 84 ஆண்டுகள் கடந்துவிட்டன.
சுதந்திரத்திற்குப் பின் 65 ஆண்டுகளாய் இத்தமிழ்ப்பள்ளியின் நிலம் பலரின் கைகளுக்கு மாறி வந்துள்ளது.
ஆறு வகுப்புகள் கொண்ட இந்த பள்ளியில் 45 மாணவர்கள் பயிலும் வேளையில் 11 ஆசியர்கள் பணிபுரிகிறார்கள்.
பொதுமக்கள் கொடுத்த 3 லட்சம் வெள்ளியை கொண்டு ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் அண்மையில் இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கியது.
புதிதாக வாங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்தில் திடல், வேலி சுவர் மற்றும் பாலர் பள்ளியை அமைக்க பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்று பள்ளி வாரியத் தலைவர் மனஹரன் தெரிவித்தார்.
.
மாணவர்களில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க திடல் தேவைப்படுகிறது.
நில உரிமையாளரிடம் இருந்து வாங்கப்பட்ட நிலத்தில் இரு வரிசை செம்பனை மரங்களை அகற்றவும் சுவர் எழுப்ப 1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி தேவைப்படுவதாக மனஹரன் தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகம் கொடுத்த விளக்கத்தை செவிமடுத்த மனிதவள அமைச்சர் சிவகுமார் ஒரு லட்சம் வெள்ளியை வழங்குவதாக உடனடியாக அறிவித்தார்.
மேலும் கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளிக்கு கூடுதல் நிதியை பெற்றுத் தர முயற்சி செய்வேன் என்றும் மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவித்தார்.

