


கோலாலம்பூர், ஜூன் 10-
தமிழ் திரையுலகில் நட்சத்திர பாடகராக வலம் வரும் சத்திய பிரகாஷ் மற்றும் கிரேமி விருது பாடகி டான்விஷா பங்கேற்கும் நட்சத்திர கலைவிழா நாளை கோலாலம்பூர் செந்தூல் எச்.ஜி.எச். மண்டபத்தில் இரவு 7.00 மணிக்கு நடைபெறுகிறது.
சமூக அறப்பணிகளுக்காக
விருந்துடன் கூடிய இன்னிசை நிகழ்ச்சியை
கம்யூனிட்டி பில்டர்ஸ் ஃபவுண்டேஷன் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வறிய நிலையில் வாழும் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் பொருட்டு கம்யூனிட்டி பில்டர்ஸ் ஃபவுண்டேஷன் எனும் அரசு சார்பற்ற நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
நாளை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் சோழா சோழா புகழ் சத்திய பிரகாஷ்,கிரேமி விருது பாடகி டான்விஷா ஆகிய இருவரோடு தமிழகத்திலிருந்து ஐவர் அடங்கிய இசையமைப்பாளர்களும் கலந்து கொள்வதாக கம்யூனிட்டி பில்டர்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர் டத்தின்ஸ்ரீ கனகம் பழனிவேலு தெரிவித்தார்.
இவர்களோடு உள்ளூர் கலைஞர்களான டாக்டர் ரவிசந்திரிகா, ஆஸ்ட்ரோ புகழ் புவனேஸ்வரன்,ஏ.ஆர். ரஹ்மான் 3.0 தேர்வில் வாகை சூடிய எஸ்.தேவராஜன்,ஜே.சுகுணா ஆகியோரும் பங்கேற்கிறார் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தின்ஸ்ரீi கனகம் தெரிவித்தார்.
இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் முன்னாள் இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ பழனிவேலால் கடந்த 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறவாரியம் தையல் கலை, மண் பாண்ட பொருள் தயாரிப்பு போன்ற துறைகளில் ஈடுபட்ட இந்தியர்களின் மேம்பாட்டிற்கு உறுதுணை புரிந்து வருகிறது என்றும் அவர் சொன்னார்.
ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என் ரெட்டி மற்றும் திரைப்பட முன்னணி நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொள்கிறார்கள் என்று அவர் சொன்னார்.
இதனிடையே நாளை நடைபெறும் விருந்துடன் கூடிய நட்சத்திர விழாவில் தமிழக கலைஞர்களுடன் இணைந்து மலேசிய கலைஞர்கள் இன்னிசை விருந்து படைப்பாளர் என்று இன்னிசை நிகழ்ச்சியின் இயக்குநர் டத்தோஸ்ரீ மலர்விழி குணசீலன் தெரிவித்தார்.
நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பாடகர் சத்திய பிரகாஷ் பல புகழ்ப் பெற்ற பாடல்களைப் பாடவிருக்கும் வேளையில் உள்ளூர் கலைஞர்களும் இவருக்கு நிகராக தங்களின் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் டத்தின்ஸ்ரீ கனகம் 5 அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளுக்கு www.ticket2u.com.my அல்லது சாந்தி 016-9800857,ஷாம் 012-6050050 ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

