

கோத்தா கெமுனிங் தொகுதியில் குறிப்பாகப் புக்கிட்
கெமுனிங் வட்டாரத்தில் நிலவும் அடிப்படை வசதிகள் பிரச்சனைக்கு
உரிய தீர்வு காணப்படும் என்று அத்தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான்
வேட்பாளர் எஸ்.பிரகாஷ் வாக்குறுதியளித்துள்ளார்.
எதிர்வரும் 12ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில்
இவ்வட்டார மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து
அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக
அவர் தெரிவித்தார்.
இத்தொகுதியில் உள்ள சில பிரச்சனைகள் எனது கவனத்திற்குக் கொண்டு
வரப்படுள்ளன. அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியில் நான்
தீவிரமாக ஈடுபடுவேன். அதற்கு முன்பாக இந்த தேர்தலில் வெற்றி
பெறுவதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என அவர்
குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள புக்கிட் கெமுனிங் 8வது மைல், ஸ்ரீ காளியம்மன்
ஆலயத்தில் நடைபெற்ற கோத்தா கெமுனிங் வட்டார சமூகத் தலைவர்கள்
மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய போது
அவர் இவ்வாறு சொன்னார். இந்த நிகழ்வில் கிள்ளான் தொகுதி முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, மலாக்கா காடேக்
தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், தொழிலதிபர்
டத்தோ அ.கணேசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

