



பத்தாங் பெர்ஜூந்தை, ஆக 8-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கும் சுயநலவாதிகளை மக்கள் புறக்கணிக்கும்படி மனிதவள அமைச்சர் வ சிவகுமார் ஈஜோக் மக்களை கேட்டுக் கொண்டார்.
ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் இப்போதுள்ள ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க சதி திட்டங்களை தீட்டுவார்கள்.
2018 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை பின்புற வழியாக கவிழ்த்தார்கள்.
அதன் பின்னர் இரண்டு பிரதமர்கள் வந்தார்கள். அரசியல் நிலைத்தன்மை உறுதியாக இல்லாததால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இப்போது டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஒற்றுமை அரசாங்கம் நல்ல முறையில் ஆட்சியை நடத்தி வருகிறது என்றார் அவர்.
கடந்த மூன்று தவணைகளாக சிலாங்கூர் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பானும் சிறந்த முறையில் ஆட்சி புரிந்து உள்ளது.
சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல நாம் தொடர்ந்து பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
ஆகவே வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடக்கும் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திரண்டு வந்து பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்
பத்தாங் பெர்ஜூந்தை ஈஜோக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் Cikgu Amidi -யை ஆதரித்து மனிதவள அமைச்சர் சிவகுமார் நேற்று தீவிர பிரச்சாரம் செய்தார்.
பத்தாங் பெர்ஜூந்தை இந்தியர் சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
பத்தாங் பெர்ஜூந்தை வட்டாரத்தை சேர்ந்த சமூக சேவையாளர் திருமூர்த்தி, கோலசிலாங்கூர் மண்ணின் மைந்தர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டு பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

