
புத்ரா ஜெயா அக் 13-
கடந்த மாதம் திருமுருகன் திருவாக்கு திருபீடத்தால் வெளியிடப்பட்ட இந்துக் கலைக்களஞ்சியம் அடங்கிய ஞானப்பேழை மனிதவள அமைச்சர் வ .சிவக்குமாரிடம் நேற்று அவரது அமைச்சில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பின்போது திருபீடத்தின் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது.
இந்து சமயத்தின் வரலாறுகளையும் ஆய்வுகளையும் 2,400 கட்டுரைகளையும் கொண்டு, 4,000 பக்கத்தில் அமைக்கப் பெற்ற பன்னிரண்டு பகுதிகள் அடங்கிய ஞானப்பேழையை இலங்கை இந்து சமய கலாசார திணைக்களத்துடன் இணைந்து திருபீடம் மீள்பதிப்பாக வெளியிட்டுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த அரும் பணி திருபீடத்தின் தவத்திரு பாலயோகி சுவாமிகளின் அருளாசிகளோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது..
இந்து சமயத்தினை பக்திப் பார்வையாகவும், ஆய்வுப் பார்வையாகவும், ஆன்மீக நோக்கோடும் சிந்திக்கவிளையும் இந்து சமயத்தவருக்கு இது சிறப்பு நூலாக அமையும் என்று திருபீடத்தின் நிர்வாகமான ஸ்ரீ சத்திய சைவ சன்மார்க் சங்கத்தின் சார்ப்பில் மாண்புமிகு அமைச்சர் சிவகுமாரை சந்தித்த நிர்வாகத்தின் செயலாளர் திரு.கண்ணா அவர்களும் , நிர்வாகச் அதிகாரி சரண்பிரபு அவர்களும் விளக்கமளித்தனர்.
அமைச்சர் சிவக்குமார் இந்துக் கலைக்களஞ்சிய ஞானப் பேழையினை மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்வோடும் பெற்றுக்கொண்டார்.
இக்கலைக் களஞ்சியங்களை நூலகங்களைக் கொண்ட பள்ளிகளுக்கு இலவசமாக 20 பள்ளிகளுக்கு சில அன்பர்களின் ஆதரவோடு வழங்கவுள்ளோம்..
இதனைப் போலவே நூலகங்களைக் கொண்ட திருக்கோவில்களுக்கும் இலவசமாக வழங்க ஆதரவு திரட்டி வருவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

