
உலக முழுவதும் தீபாவளி பண்டிகையை மிகவும் உற்சாகமாக கொண்டாடப் படவிருக்கும் இந்த தருணத்தில் ஆதரவற்ற குழந்தைகள், தனித்து வாழும் தாய்மார்கள் 9 சமூகநல இல்லங்களுக்கு தொண்டூழிய அடிப்படையில் உதவிகளை வழங்கி இருக்கும் சொக்சோ நிறுவனத்தின் சேவைகள் அளப்பரியது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று ஈப்போ இம்பியானா தங்கும் விடுதியில் தீபாவளி கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் சொக்சோ நிறுவனத்தின் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது.
மேலும் ஈப்போ வட்டாரத்தைச் சேர்ந்த ஒன்பது சமூக நல இல்லங்களுக்கு நன்கொடை வழங்கப்பட்டது.
இது தவிர்த்து சொக்சோ நிறுவனத்தின் வாயிலாக 15 பேருக்கு சொக்சோ இழப்பீட்டு உதவி தொகையும் வழங்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.
சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், பேராக் மாநில சொக்சோ இயக்குனர் மோகன்தாஸ், அதன் அதிகாரிகள் மற்றும் மனிதவள அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

