
ஈப்போ, ஜன 1-
திருப்புகழை பாட முருக பக்தர்கள் திருத்தணியில் சந்திக்கின்றனர். அதுபோலவே கடந்த 15 வருடங்களாக உலகிலுள்ள முருக பக்தர்கள் ஈப்போ தண்டாயுதபாணி ஆலயத்தில் ஒன்றுகூடி முருகன் பாடல்களையும் பெருமையும் பற்றி பேசி வருகின்றனர் என்பது மகிழ்ச்சியா உள்ளது.
அதன் அடிப்படையில் ஈப்போவில் திருப்புகழ் சபை விரைவில் நிறுவப்படும். முதல் முறையாக இச்சபை நிறுவப்படுவதோடு இது வரலாற்றுப் பதிவில் இடம்பெறும் என்று இங்கு நடைபெற்ற 15 வது ஆண்டு அருணகிரிநாதர் விழாவின் தொடக்க விழாவில் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வ.ஜெயபாலன் கூறினார்.
இந்த திருப்புகழ் சபையை அமைக்க அனைத்து உதவிகளை செய்ய சைபர் ஜெயா பல்கலைக்கழக துணை வேந்தர் டான்ஸ்ரீ டாக்டர் பலன் உறுதியளித்துள்ளார். இப்புத்தாண்டில் ஆன்மீக சிறப்பு களுடன் தன்முனைப்பு சக்தியுடன் செயல்பட இச்சம்பவம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அருணகிரிநாதர் விழாவில் இளைஞர்களுக்கான அமுதம் வகுப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இம்மாதிரியான வகுப்புகள் வாயிலாக இந்திய மாணவர்கள் ஆன்மீகத்துடன் மனிதநேய பண்புகளை நன்கு உணர்ந்து செயல்படுகின்றனர். இம்மாதிரியான வகுப்புகளால் தற்போது இந்நாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வெற்றியை பெற்று வருகின்றனர் என்று சைபர் ஜெய பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் இணைவேந்தர் டான்ஸ்ரீ டாக்டர் பாலன் பாராட்டினார்.
இந்த அருணகிரிநாதார் விழாவினை தொடக்கி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு உள்ளூர் இசைக்கலைஞர்களுடன் இந்தியா மற்றும் சிங்கப்பூர் கலைஞர்களும் தங்கள் படைப்பை வழங்கி வருவது சிறப்பாக இருக்கிறது. அதுபோலவே பல நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் இங்கு வருகையளித்துள்ளது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் சொன்னார்.
காலையில் இங்குள்ள மரத்தடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து முருக பெருமான் ஊர்வலமாக கொண்டு சென்று லகாட் சாலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டார். இந்த ஊர்வலத்தில் முருக பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகனின் அருள் பெற்றனர்.

