
புத்ராஜெயா, பிப் 20-
இந்நாட்டில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் (SJK) தொடர்ந்து இயங்கும் என்று பெடரல் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும், தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் விண்ணப்பத்தை பெடரல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
பெடரல் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு 2-1 என்ற முடிவில் Majlis Pembangunan Pendidikan Islam Malaysia (Mappim) மற்றும் Gabungan Persatuan Penulis Malaysia (Gapena) தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அவர்களின் விண்ணப்பம் உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்டது.
29 டிசம்பர் 2021 அன்று, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி (இப்போது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி) தமிழ் மற்றும் சீனமொழி ஆகியவை கூட்டாட்சி அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுகின்றன என்று தீர்ப்பளித்தார்.
இதனிடையே, பெடரல் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சமூக ஆர்வலர் அருண் துரைசாமி தெரிவித்தார்.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், கூட்டரசு நீதிமன்றம் ஆகியவை தமிழ், சீனப்பள்ளிகள் சட்டப்பூர்வமானவை என்று தீர்ப்பு வழங்கி இருப்பதால் இனி தாய்மொழிப் பள்ளிகள் குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது என்று அருண் துரைசாமி தெரிவித்தார்.

