
நாடு மட்டுமின்றி உலகமே 4.0 தொழிற்புரட்சியை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் சூழலில் இன்றைய மாணவர்கள் நாளைய சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமான முன்னேற வேண்டும் என்னும் இலக்கோடு இங்குள்ள துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியில் “இயந்திரவியல் கல்வி திட்டம்” ( ROBOTIC CLASS) வகுப்பை நடத்தவிருப்பதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.இரா.தமிழ்ச் செல்வி தெரிவித்தார்.
உலகம் நவீனத்துவத்தையும் கணினிமயமாகவும் விரிவடைந்துள்ள சூழலில் அறிவியல் மற்றும் புத்தாக்கம் சிந்தனையும் செயல்பாடும் மாணவர்கள் மத்தியில் வேரூன்ற வேண்டும் என்னும் தூரநோக்கு சிந்தனையோடும் இப்பயிலரங்கத்தை இலவசமாக ஏற்பாடு செய்திருப்பதாகவும் மாணவர்கள் தயக்கம் இன்றி இப்பயிலரங்கில் கலந்து பயன்பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
2024ஆம் ஆண்டுக்கான புதிய பள்ளித்தவணை தொடங்கிவிட்ட நிலையில் இப்பள்ளியின் ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கம் உட்பட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்போடும் ஆதரவோடும் நடத்தப்படும் இயந்திரவியல் கல்வி திட்டம் இப்பள்ளியின் வரலாற்றில் மட்டுமின்றி இவ்வட்டாரத்திலும் தனித்துவ தன்மையை கொண்டிருக்கும் என்றார்.
இவ்வகுப்பு ஒவ்வொரு வியாழன் (மதியம் 1.00 தொடங்கி மதியம் 2.00 வரை) மற்றும் வெள்ளிக்கிழமை மதியம் 12.00 தொடங்கி மதியம் 1.00 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தத்தம் பிள்ளைகளை இவ்வகுப்பிற்கு அனுப்பி வைக்குமாறும் பெற்றோர்களை தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டார்.

