
செமினி, மார்ச் 22-
வீடமைப்புப் பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள் குவிந்து கிடப்பதைத் தீர்க்கும் ஒரு முயற்சியாக இ-டிரெக் எனப்படும் இயங்கலை வாயிலாக வாகன பதிவை ரத்து செய்யும் முறையை சாலை போக்குவரத்து துறை (ஜே.பி.ஜே.) அறிமுகப்படுத்தியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ பூக் தெரிவித்தார்.
இதில் தங்களின் மோட்டார் வாகனங்களை அழிக்க விரும்பும் உரிமையாளர்கள் அதற்கான பதிவு நடவடிக்கையை இணையம் வாயிலாகவே மேற்கொள்ளலாம்.
இத்திட்டம் மோட்டார் வாகனங்கள் நிரந்தர பழுது அல்லது பயணிப்பதற்கு தேவையற்ற நிலையில் இருப்பது போன்ற காரணங்கள் சம்பந்தப்பட்டதாகும்.
எனினும், இந்த வாகனங்கள் சுற்றுச்சூழல் துறை நிர்ணயித்த அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி முறையாக அழிக்கப்படுவதை உறுதிச் செய்ய உரிமம் பெற்ற வாகன சிகிச்சை வசதி மையத்தில் (ஏ.ஏ.டி.எஃப்.) மட்டுமே அனுமதிக்கப்படும்.
அந்த வகையில் தொடக்கக்கட்டமாக பண்டார் டெக்னொலோஜி காஜாங்கில் இந்த செயல்முறை இ-ஆட்டோ சென்.பெர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்று இந்த ஏ.ஏ.டி.எஃப். மையத்திற்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

