
செ.வே.முத்தமிழ்மன்னன்
சுங்கை திங்கி, மே 6-
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் 26 ஆண்டுகளாக சொந்த வீடுகளுக்கு போராடி வரும் ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த 244 பாட்டாளிகள் வாழ்வில் இன்று புதிய வசந்தம் வீசியது.
ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த 245 பாட்டாளிகள் இன்று சொந்த வீடுகளை பெறும் முயற்சியில் வெற்றி பெற்றனர்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள மேரி தோட்டம், நைகல் கார்டனர் தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம், சுங்கை திங்கி தோட்டம், மிஞ்ஞாக் தோட்டம் ஆகிய 5 தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை கடந்த 1998 ஆம் ஆண்டு தொடங்கி 26 ஆண்டுகள் நீடித்தன.
அத்தோட்டங்களில் பணிப்புரிந்த 245 தோட்டப் பாட்டாளிகள் வீடுகள் எதுவும் வழங்கப்படாமலேயே அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு தோட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.
தங்களுக்கு சொந்த வீடுகள் வழங்கக் கோரி இவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர்.
இன்று இறுதியாக இந்த போராட்டத்தில் இவர்கள் வெற்றி பெற்றனர்.

வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தலைமையில் இன்று இவர்களுக்கு வீடுகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
பெர்ஜெயா மேம்பாட்டு நிறுவனம் வழங்கிய 20 ஏக்கர் நிலப்பரப்பில் 245 தரை வீடுகள் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
இந்த வீடமைப்பு திட்டத்திற்கு
மத்திய அரசு 4 கோடி வெள்ளியும் சிலாங்கூர் மாநில அரசு 3 கோடியே 50 லட்சம் வெள்ளியும் ஒதுக்கியுள்ளது.
இந்த வீடமைப்பு திட்டத்தின் மொத்த மதிப்பு 8 கோடி வெற்றியாகும் என்று அவர் சொன்னார்.