
பகாங்,மே15
: தீபகற்ப மலேசியாவின் மிகப் பெரிய மாநிலமாக விளங்கும் பகாங் மாநிலத்தில் இயங்கும் ஒற்றுமை அரசு இந்திய சமுகத்தை பிரதிநிதிக்க புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் ஏன் ஒரு இந்தியரை கூட நியமனம் செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை மாறாக புறக்கணித்து வருகிறது என்ற கேள்வியை
பகாங் உரிமை கட்சியின் இடைக்காலத் தலைவர் திரு. கணேசன் முன் வைத்து உள்ளார்.
இந்திய சமுகத்தின் பிரதிநிதியாக பகாங் மாநில அரசின் ( தேர்வு சட்டமன்ற உறுப்பினராக), பகாங் மாநில அரசின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இன்று வரை ஓர் இந்தியர் நியமிக்கப்படாததால், இந்திய சமூகம் மாநில அரசின் மீது தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருப்பதாக அவர் தெளிவு படுத்தினார்.
சமீபத்தில், பகாங் மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் அவர்கள் அம்னோ (Umno) கட்சி , மசிச (MCA ) மற்றும் மக்கள் நீதி கட்சி (PKR) கட்சி சார்பாக ஐவரை (தேர்தலில் போட்டியிடாத சிறப்பு சட்டமன்ற உறுப்பினர்களாக) நியமித்துள்ளார்.
ஆனால்
இவ்வாறு முதலமைச்சர் நியமித்தவர்களில் இந்தியர்கள் சார்பாக ஒருவரும் இடம் பெற வில்லை.
பகாங் மாநிலத்தில் இந்திய மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைவாக இருப்பினும் அதற்கேற்ற வகையில் இந்திய சமூகத்தைப் சேர்ந்த எவரும் மாநில அரசின் ஆட்சிக் குழு உறுப்பினராகவோ மற்றும் சிறப்பு நியமன சட்டமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்படவில்லை.
முன்பு பகாங் மாநிலத்தில் மேலவை உறுப்பினராக ஒரு இந்திய பிரதிநிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தார்கள்.அதையெல்லாம் நாம் இழந்து,
தற்போது, சபாய் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆறுமுகம் வீரப்பா பிள்ளை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே இந்திய பிரதிநிதியாக மாநில சட்டமன்றத்தில் இடம் பெற்று உள்ளார்.
மாண்புமிகு ஆறுமுகம் அவர்கள் ஓருவரால் ஒட்டு மொத்த பகாங் மாநிலத்தில் வாழும் இந்தியர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது இயலாத காரியம்.
பகாங் மாநிலத்தில் வாழும் இந்திய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க, இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்ய வேண்டும்.
மத்திய அரசாங்கத்தைப் போலவே, பகாங் மாநில அரசாங்கமும் ஒற்றுமை அரசாங்கம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஒற்றுமை என்ற கோட்பாட்டை பாதுகாக்க, அரசியல் நியமனங்களில் இந்தியர்களுக்கும் மாநில அரசு முன்னுரிமை அளிப்பதிலிருந்து விலகக் கூடாது.
நியமன சட்டமன்ற உறுப்பினர் பட்டியலில் இந்தியர் ஒருவர் இடம் பெற வேண்டும் என்றும் கணேசன் வலியுறுத்தி வருகிறார். பகாங் மாநிலத்தில் வாழும் இந்திய சமூகம் மாநில அரசால் தாங்கள் ஒதுக்கப்பட்டு, புறக்கனிக்கப் பட்டு வருவதை நன்றாக உணரத் தொடங்கி விட்டார்கள்,
பகாங் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியில் இருந்து இந்தியர்களின் சிக்கலை களையவோ, தீர்த்து வைக்கவோ இதுவரை பகாங் மாநிலத்தில் வாழும் ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் சார்பாக பிரதிநிதித்துவம் வழங்கப் பட வில்லை !
மாநில அரசு இந்திய சமூகத்தை புறக்கணித்து வருவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்துக் கட்சிகளும், குறிப்பாக ஜனநாயக செயல் கட்சி (DAP)மற்றும் மக்கள் நீதி கட்சி (PKR ) பகாங் மாநிலத்தில் இந்தியர்கள் எதிர் நோக்கியுள்ள இந்தப் பிரச்சினையில் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குரல் கொடுத்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

