




பிறை, ஜூன் 15-
பினாங்கு மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ பி.கே. சுப்பையா மற்றும் டிரிடோனி கிண்ண கால்பந்து போட்டி உற்சாகமான விளையாட்டு மனப்பான்மை மற்றும் திறமையின் வெளிப்பாடாக சிறப்பாக நடைபெற்றன.
ஆண்கள் பிரிவில் 28 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 26 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 தமிழ்ப் பள்ளிகளும் பங்கேற்று போட்டியிட்டன.
இந்தப் போட்டியை பினாங்கு இந்திய கால்பந்து சங்கம் (PIFA), பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் எஸ்.ஜே.கே.(டி) இராமதாசர் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்த போட்டியை ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும், பினாங்கு இந்து அறநிலைய வாரியத்தின் தலைவருமான மாண்புமிகு ஆர்.எஸ்.என். ராயர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
நிகழ்வில் திரு ஏ. சக்திவேலா (ஏற்பாட்டுக் குழு தலைவர், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம்), திரு பி. பிரேம்குமார் (தலைவர், PIFA), கே.வி. அன்பா (தலைவர், MIFA) மற்றும் ஸ்ரீ சங்கர் (துணைத் தலைவர், MIFA) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ, கலந்து சிறப்பித்தார்.
டத்தோ பி.கே. சுப்பையாவின் மகன் கணேஷ் சுப்பையா, டிரிடோனி ஸ்போர்ட்ஸ்வேர் நிறுவன உரிமையாளரான மற்றும் திருமதி சங்கர் முனியாண்டி, மேலும் காஜா பூத்தே நிறுவன இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், போட்டியை வெற்றிகரமாக நடத்த பாடுபட்ட ஏற்பாட்டாளர்கள், பள்ளிகள் மற்றும் பெற்றோர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினர்.
இந்தப் போட்டி இளம் கால்பந்து வீரர்களின் திறமைகளை வெளிக் கொணரும் முக்கிய தளமாக அமைந்ததோடு, தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே விளையாட்டு வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் ஊக்கமளித்தது.
பினாங்கு இந்திய கால்பந்து சங்கம் (PIFA) மற்றும் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் ஆகியவை, போட்டியை மிகப்பெரிய வெற்றியாக மாற்றிய அனைத்து மாணவர்கள், பள்ளிகள், ஆதரவாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டன.

