மடாணி அரசாங்கத்தின் கீழ் சீன, தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; கல்வி அமைச்சு உறுதி

ஜோர்ஜ் டவுன், ஜூன் 16 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடாணி (MADANI) அரசாங்கத்தின் கீழ், நாட்டில் உள்ள எந்தவொரு சீனப் பள்ளியோ (SJKC) அல்லது தமிழ்ப் பள்ளியோ (SJKT) மூடப்படாது என்று கல்வி அமைச்சு உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

மாணவர் சேர்க்கை குறைவு மற்றும் பள்ளி நிலப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தேசியக் கல்வி முறையில் உள்ள சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து சீன மற்றும் இந்தியச் சமூகத்தினரிடையே தொடர்ந்து கவலைகள் நிலவி வருகின்றன.

இத்தகையச் சூழலில், தேசியக் கல்வி முறையில் உள்ள அனைத்து வகையானப் பள்ளி நீரோட்டங்களையும் பாதுகாப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இந்த உத்தரவாதம் பிரதிபலிக்கிறது என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஸ்ரீ ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடக் கட்டுமான அனுமதி ஆணை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழுவின் தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜூவும் கலந்து சிறப்பித்தார்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் பலமுறை வலியுறுத்தியுள்ளபடி, நமது தேசியக் கல்வி முறையில் தாய்மொழிப் பள்ளிகள் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகின்றன என்று துணைக் அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.

எனவே, ஒரு சீன அல்லது தமிழ்ப் பள்ளியைக் கூட மூடாமல், தற்போதுள்ள அனைத்துப் பள்ளிகளையும் அப்படியே தக்கவைத்துக் கொள்வதே மடாணி அரசாங்கத்தின் மாறாத இலக்கு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதற்கு முன்னதாக, குறிப்பிட்ட சில பள்ளிகள் மூடப்படலாம் அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியதையும், சில தரப்பினர் தாய்மொழிப் பள்ளிகளின் நிலையைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது அரசாங்கம் வழங்கியுள்ள இந்த அதிகாரப்பூர்வ உத்தரவாதம், பள்ளி வாரியங்கள், கல்வியாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், இதன் மூலம் அவர்கள் தங்களின் பள்ளிகளின் மேம்பாட்டில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

பின்னணி வேறுபாடின்றி நாட்டின் ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப, நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்துப் பள்ளி நீரோட்டங்களின் வளர்ச்சிக்கும் கல்வி அமைச்சு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய துணைக் அமைச்சர் வோங், கடந்த ஜனவரி மாதம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீட்டை 20 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தி அறிவித்ததை நினைவுகூர்ந்தார்.

இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடானது, நாடு முழுவதும் உள்ள கல்வி உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதோடு, பள்ளி வசதிகள் பாதுகாப்பாகவும், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு உகந்ததாகவும் இருப்பதை உறுதி செய்யும் என்றார்.

குறிப்பாக, கட்டடப் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளில் சிக்கல்களை எதிர்கொள்ளும் தாய்மொழிப் பள்ளிகளின் தற்போதையத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் மடாணி அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையை இது காட்டுவதாகவும், ஒவ்வொரு பள்ளியின் உண்மையானத் தேவைக்கு ஏற்ப இந்த நிதி மிகவும் முறையான வழியில் விநியோகிக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவு (மித்ரா) வழங்கும் நிதியின் மூலம், பினாங்கு மாநிலத்தில் உள்ள 22 அரசாங்க உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய மேசை நாற்காலிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை வாங்குவதற்கும் மாற்றுவதற்கும் 1.156 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்படவுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles