மஇகா கல்விக் குழுத் தலைவர்மாண்புமிகு செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி

இந்திய சமுதாயத்தில், புராணம் காலம் தொட்டு, ‘குரு’ என அழைக்கப்படும் ஆசிரியருக்கு பெரும் கௌரவமும் மரியாதையும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. அதனால்தான் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற முதுமொழியே தமிழில் உருவானது. பெற்றோர்களுக்கு அடுத்து, தெய்வத்தை விட, நாம் அதிகம் முக்கியத்துவம் தர வேண்டியது நமது ஆசிரியர்களுக்குத்தான்.
கல்வியும், வித்தையும் சொல்லித் தரும் குருவுக்கு, தவறாமல் காணிக்கை வழங்கும் பழக்கமும் நம் சமூகத்தில் ஆதிகாலம் தொட்டு நிலவி வந்திருக்கிறது.
இன்று பலரும் பல தொழில்களைப் பார்த்தாலும், பல வேலைகளைச் செய்தாலும், ஆசிரியர் பணி என்பது மட்டும் வாங்கும் சம்பளத்தைவிட அதிகமான தியாகத்தையும், அர்ப்பண உணர்வையும் ஒருவர் வழங்கும் துறையாகும்.
யார் வாழ்க்கையில் முன்னேறினாலும், கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்தாலும், ஒரு மனிதனுக்கு பொறாமை குணம் ஏற்படுவது இயல்பு. ஆனால், ஒருவன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் அவனைப் பார்த்து பொறாமைப் படாமல் பெருமிதமும், பெருமையும், மகிழ்ச்சியும் கொள்ளும் மனம் ஆசிரியர் ஒருவருக்கே உரியது.
நம்மில் யாரும் உயர்ந்த பதவிகளை அடைந்தாலோ, செல்வச் செழிப்பை அடைந்தாலோ, நாம் நாடிச் சென்று நன்றி கூறுவது ஆசிரியருக்குத்தான்!
இவ்வாறு பல வகைகளிலும் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும், நம் அறிவைக் கூர்மையாக்கி மெருகேற்றும் ஆசிரியர் சமுதாயத்திற்கு நன்றி கூறும் நாளாக – அவர்களின் தியாகப் பணிகளை நினைவுபடுத்தும், கௌரவப்படுத்தும் நாளாக மலரும் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்து கூறுவதிலும் நன்றி தெரிவிப்பதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நாடு முழுவதிலும் கல்விப் பணியாற்றும், இனம், மதம் பாராமல் மாணவர்களுக்கு நல்லறிவைப் புகட்டும் ஆசிரியர் சமுதாயம் தொடர்ந்து தங்களின் சேவைகளை நாட்டுக்கும் மாணவர் சமுதாயத்திற்கும் வழங்கி வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாகத் தமிழ்ப் பள்ளிகளில் பணியாற்றும் நமது இந்திய ஆசிரியர்கள் தமிழ்ப் பள்ளிகளின் சூழல், புறநகர் பகுதிகளில் பள்ளிகள் அமைந்திருப்பது, மாணவர்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சனைகள், அவர்களின் ஏழ்மை – போன்ற பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தன்னலம் பாராமல் அர்ப்பண உணர்வுடன் நமது மொழி, இன மேம்பாட்டுக்காக சேவையாற்றி வருகின்றனர். அவர்களுக்காக என் தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் சேவைகளை இந்திய சமூகம் என்றும் நன்றியுடன் நினைவு கூரும் என்பதிலும் ஐயமில்லை.
நாடெங்கிலும் ஆசிரியர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட எனது நல்வாழ்த்துகள்.
அன்புடன்,

செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன்
மஇகா கல்விக் குழுத் தலைவர்
15 மே 2024

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles