
கோலாலம்பூர், மே 1:
தொழிலாளர்களின் விடாமுயற்சியும், அவர்கள் சிந்தும் வியர்வையுமே அவர்களின் வாழ்வின் உயர்வுக்கும் வெற்றிக்கும் உண்மையான மூலதனம் என்று மிம்கோய்ன் (MIMCOIN) தலைவரும், எஹ்சான் வர்த்தக குழுமத்தின் தலைவருமான டத்தோ பிவி அப்துல் ஹமித் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில், தொழிலாளர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அர்ப்பணிப்பே முன்னேற்றம் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அவர்களின் உழைப்புதான் ஆகச்சிறந்த முதலீடு என்று குறிப்பிட்ட அவர், அந்த உழைப்பின் மூலமே ஒருவருடைய வாழ்க்கை தரம் உயர முடியும் என்றும், பொருளாதார ரீதியாக அவர்கள் முன்னேற்றம் காண முடியும் என்றும் வலியுறுத்தினார்.
தொழிலை மதித்தல் “நாம் எந்தத் தொழிலைச் செய்பவராக இருந்தாலும், அந்தத் தொழிலுக்கு நாம் உரிய மதிப்பையும் கௌரவத்தையும் அளிக்க வேண்டும். எந்த ஒரு பணியையும் தாழ்வாகவோ அல்லது தரம் குறைவாகவோ பார்ப்பது முறையல்ல. செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
உலக வளர்ச்சிக்கு அடித்தளம் மேலும், இன்று உலகம் அடைந்துள்ள ஒட்டுமொத்த வளர்ச்சியும், செல்வச் செழிப்பும் பலதரப்பட்ட தொழிலாளர்களின் கடுமையான உழைப்பாலும், ஈடு இணையற்ற அர்ப்பணிப்பாலும் உருவானவை என்பதைச் சமுதாயம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நமது சமுதாயம் உழைப்பின் மேன்மையை முழுமையாக உணர்ந்து, கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே தமது விருப்பம் என டத்தோ அப்துல் ஹமித் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

