
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த முன்னோர்களின் தியாகங்களையும் கடின உழைப்பையும் நினைவுகூர்ந்து அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மலேசியா அடைந்துள்ள வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் பல இன மக்களின் பங்களிப்பே முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
“தகர சுரங்கங்கள், ரப்பர் தோட்டங்கள், ரயில்பாதைகள், சாலைகள், துறைமுகங்கள் மற்றும் பொது கட்டமைப்புகளை உருவாக்குவதில் பல தலைமுறைகளாக மலேசியர்கள் அயராது உழைத்துள்ளனர்.
அவர்களின் வியர்வை மற்றும் தியாகங்களே இன்று நாம் காணும் மலேசியாவின் அடித்தளம்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மலாய் விவசாயிகளும் மீனவர்களும் சமூகத்தின் வாழ்வாதாரத்தை தாங்கியதுடன், சீன தொழில்முனைவோர்களும் சுரங்கத் தொழிலாளர்களும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்ததாகவும், இந்திய தோட்ட மற்றும் ரயில் தொழிலாளர்கள் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை கட்டியெழுப்பியதாகவும், சபா மற்றும் சரவாக் பூர்வகுடியின மக்கள் நமது நாட்டின் செழுமையான பாரம்பரியத்தையும் வலிமையையும் காத்து வந்தனர்.
இவர்கள் அனைவரும் இணைந்து இன்று மலேசியாவை வரையறுக்கும் ஒற்றுமை, உறுதி மற்றும் முன்னேற்றத்தின் உணர்வை உருவாக்கினர்.
தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர்களை கொண்டாடும் நாள் மட்டுமல்ல; இனம், மதம் அல்லது பின்னணி பாராமல் ஒற்றுமை, தியாகம் மற்றும் கூட்டு முயற்சியின் மூலம் தான் ஒரு நாடு கட்டியெழுப்பப்படுகிறது என்பதற்கான நினைவூட்டலுமாகும்.
நாம் முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், உழைப்பின் கண்ணியத்தை மதித்து, தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்து, எதிர்கால தலைமுறைகளுக்காக நீதியும் முன்னேற்றமும் நிறைந்த மலேசியாவை உருவாக்குவோம்.
அனைத்து மலேசியர்களுக்கு இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள் என்று தனது வாழ்த்து செய்தியில் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன்.

