
சுங்கை சிப்புட், ஜுன். 11: கடந்த மாதம் உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இம்மாதம் 16 ல் தந்தையர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இருப்பினும், இந்த பெற்றோர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாக மனப்பான்மைக்கு மதிப்பளிக்கும் பொருட்டு பேராக் முன்னேற்ற சக்தி இயக்கமும், லிந்தாங் ஜெய ம இ கா கிளையும் ஒன்றிணந்து இந்த பெற்றோர்கள் தினத்தை ஏற்பாடு செய்துள்ளதாக இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தலைவர் அ.பாலசுப்பிரமணியம் கூறினார்.
தமது இயக்கத்திலுள்ள சுமார் 40 பெற்றோர்கள் கெளரவித்து சிறப்பிக்கப்பட்டனர். ஒரு தாய் பத்து மாதம் சுமந்து குழந்தையை ஈன்றெடுக்கிறார். அவரின் தியாகம் மற்றும் அர்பணிப்புக்கு ஈடுகட்ட முடியாது. அவர்களின் தியாகத்தை இதுபோன்ற நிகழ்வுகளின் வாயிலாக இன்றைய சமூக இளைஞர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தந்தை என்பவர் கண்டிப்பானவர். ஆனால், அதிக அளவில் பிள்ளைகள் மற்றும் குடும்பம் மீது அன்பு கொண்டவர். அவரின் அர்பணிப்பு மற்றும் உழைப்பு ஆகியவை குடும்பத்தின் மேம்பாட்டிற்கு பெரும் உதவியாக திகழ்கிறது. அவரின் சொல்லை மதித்து நடந்தவர்கள் வாழ்க்கையில் மென்மேலும் வெற்றி பெறுவார்கள். அதற்குதான் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று சான்றோர்கள் கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று பெற்றோர்களையும் பிள்ளைகளையும் பிரிக்கும் கருவியாக கைத்தொலைபேசி இருந்து வருகிறது. இந்த கைத்தொலைபேசியால் நன்மையை விட தீமையே அதிகம். இந்த நவநாகரீக கருவி குடும்பத்தாரிடம் விரிசலை உருவாக்கி வருகிறது. பிள்ளைகள் பெற்றோர்களை ஓரங்கட்டும் நிலைப்பாடும் உருவாகி விட்டது. காலப்போக்கில் இந்த சமூகத்தில் பல சீரழிவுகளை கொண்டு வந்துவிடும் என்று அஞ்சுவதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு 9 வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. சுந்தர்ராஜ் லெட்சுமணன் தொடக்கி வைத்தார். தாயார் சகுந்தலை கோவிந்தசாமி சிறப்பு பிரமுகராக கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வில் பெற்றோர்கள் அனிசல் வெட்டி உண்டு மகிழ்ந்தனர். அதோடு, தாய் தந்தையருக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. நிறைவுவிழாவில் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு வழங்கி மகிழ்வித்தனர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அனைத்து நல்லுள்ளங்கள் நன்கொடையாளர்கள் மற்றும் செயலவையினருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

