
காளிதாஸ் சுப்ரமணியம்
தலைநகர் JW Marriot Hotel-இல் நேற்று இரவு ரஷ்யா தூதரகத்தின் ஏற்பாட்டில் ரஷ்ய தினம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஜூன் 12 ஆம் தேதியும், ரஷ்யர்கள் ரஷ்யா தினத்தை கொண்டாடி வருகிறார்கள். 1990 இல் சோவியத் யூனியனிடமிருந்து நாட்டின் இறையாண்மையை அறிவித்ததை நினைவுகூரும் நாளாக இந்த ரஷ்ய தினம் விழங்குகிறது
தோழமை உணர்வின் மூலம் ரஷ்யாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நல்லுறவு மேலும் வலுப்பெறும் என்று நேற்று இரவு, நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மகளிர், குடும்ப, சமூகநல மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹஜா நான்ஸி சுக்ரி கூறினார்.

இதனைத் தொடர்ந்து ரஷ்யர்களுக்கும் அமைச்சர் நான்ஸி தனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பல ஆண்டுகளாக, மலேசியாவும் ரஷ்யாவும் துடிப்பான மற்றும் ஆற்றல்மிக்க கூட்டாண்மையுடன் இணைந்து செயலாற்றி வருகின்றன. கலாசார பாராட்டு மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்காக இந்த இரு நாடுகளுக்கிடையே பகிரப்பட்டு வருகின்ற ஒத்துழைப்பு செழுமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆரோக்கியமான உறவு பல கலாசார பரிமாற்றங்கள், கலை ஒத்துழைப்பு மற்றும் கல்வி முயற்சிகளுக்குக் கதவுகளைத் திறந்து, நம் மக்களிடையே பிணைப்பை வலுப்படுத்தியுள்ளது.

ரஷ்ய நாட்டுடனான ஒத்துழைப்பு கலாச்சார பறிமாற்றத்தின் முக்கியத்துவத்தையும், சமூக மேம்பாடு, பரஸ்பர புரிந்துணர்வின் உயர் தாக்கங்களையும் கோட்டிட்டுக் காட்டுகிறது என்று அமைச்சர் நான்ஸி கூறினார்.
எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் செழுமையான கலாசாரம், சமூக வளர்ச்சிக்கு மலேசிய-ரஷ்யா ஒன்றிணைந்து வெற்றி காணும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உலுசிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளரான டாக்டர் சத்திய பிரகாஷ் கூறுகையில், இரு நாடுகளின் வளமான பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் இந்த இரு நாடுகளுக்கிடையேயான கலாசார உறவுகள் செழுமையாக உள்ளன.
பாரம்பரிய நிகழ்ச்சிகள், கலைக் கண்காட்சிகள், கல்விப் பரிமாற்றங்கள் மற்றும் சமூகத் திட்டங்கள் போன்ற முன்னெடுப்புகள் யாவும் நமது மக்களை வளப்படுத்துவதோடு ஆழமான பரஸ்பர புரிதலுக்கும் வழி வகுக்கின்றது.
கலாச்சார செயலாண்மைத்திறத்தின் மைல்கல்லைக் கொண்டாடும் தருணத்தில், இந்த இரு நாடுகளின் உறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் என்று தாம் நம்புவதாக சத்திய பிரகாஷ் கூறினார்.

மேலும் நிகழ்ச்சியில் ரஷ்ய நாட்டின் கலாச்சார ஓவியங்களும் கண்காட்சிப் பொருட்களும் வருகையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது நிகழ்ச்சியின் தனி சிறப்பு அம்சமாகும்.
மலேசியாவுக்கான ரஷ்ய தூதர் நைல் லாட்டிபோவ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்து அரசாங்க அதிகாரிகளும் மலேசியாவின் பல முக்கிய வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.

