
ஜோகூர், ஜூலை 1 – ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பிகேஆர், பெர்சத்து மற்றும் டிஏபி கட்சிகளை மீண்டும் தேர்வு செய்ய வேண்டுமா என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ் தனேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் தோறும் பல்வேறு வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்படுகின்றன. ஆனால் தேர்தலுக்குப் பிறகு அந்த வாக்குறுதிகள் நிறைவேறும் என மக்கள் தொடர்ந்து காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி வருவதாக அவர் தெரிவித்தார்.
ஜோகூர் மக்களை அரசியல் கோஷங்கள் மற்றும் வெறும் வாக்குறுதிகளால் எளிதில் கவர முடியாது என்றும், மாநிலத்திற்கு நிலையான ஆட்சி, தெளிவான வழிகாட்டுதல் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னெடுக்கும் தலைமையே தேவை என்றும் அவர் கூறினார்.
மேலும், மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறும் எதிர்க்கட்சிகள், இதுவரை தங்களது தலைமையையும் எதிர்கால திசையையும் குறித்து ஒருமித்த முடிவை எட்ட முடியாமல் இருப்பதாகவும், மாநிலத்தை திறம்பட வழிநடத்தத் தயாராக இருப்பவர்கள் யார் என்பதை மக்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், டத்தோ ஒன் ஹாபிஸ் காஸி தலைமையில் ஜோகூரின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுக்கும் தெளிவான நோக்கத்துடன் பாரிசான் நேஷனல் செயல்பட்டு வருவதாகவும், நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியைத் தொடர வேண்டுமா அல்லது அரசியல் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ள வேண்டுமா என்பது மக்களின் தீர்மானமாகும் என்றார் அவர்.
இறுதியாக, “அரசியல் வெற்று வாக்குறுதிகளை நிராகரித்து, ஜோகூரின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பாரிசான் நேஷனலுக்கு வலுவான மக்கள் ஆதரவை வழங்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்.

