
ஈப்போ,ஜுன்15: சமூகப்பற்றாளரும் நனிச் சிறந்த ஆசிரியருமான ஆசிரியர்மணி இரா.மாணிக்கம் தலைமையில் ஈப்போவில் துன் வீ.தி.சம்பந்தனின் 105வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தன் வாழ்நாளின் பெரும் பகுதியை இந்தியச் சமுதாயத்தின் உயர்விற்காகவும் மேம்பாட்டிற்காகவும் தன்னை அர்ப்பணித்து கொண்ட இந்தியச் சமுதாயத்தின் நனிச் சிறந்த தலைவரான துன் வீ.தி,சம்பந்தனை நினைவுக்கூறும் விதமாகவும் அவரது மக்கள் சேவையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையிலும் அவரது பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இரா.மாணிக்கம் குறிப்பிட்டார்.
இத்தகைய உன்னத நிகழ்ச்சி வருகின்ற 16ஆம் தேதி ஜூன் மாதம் 2024இல் ஞாயிற்றுக்கிழமை ஈப்போ அருள் ஒளி மன்றத்தில் (புந்தோங்,ஜாலான் லாயாங் – லாயாங்) மாலை மணி 7.30க்கு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காலங்கள் கடந்தாலும் தன் சேவையாளும் மதிப்புமிகு தலைமைத்துவ மாண்பினாலும் மக்களின் மனங்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் துன் வீ.தி.சம்பந்தனின் 105வது பிறந்தநாள் விழாவிற்கு சட்டம் மற்றும் நிறுவன உருமாற்ற துணை அமைச்சரும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் சிறப்பு வருகை புரியும் நிலையில் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் வாழ்த்துரையும் வழங்குவார்.
மேலும்,இந்நிகழ்ச்சியில் தைப்பிங்கை செர்ந்த கல்வியாளர் திருஞானசம்பந்தன் முத்துசாமியின் சிறப்புரையும் இடம்பெறவிருக்கும் நிலையில் துன் வீ.தி.சம்பந்தனின் அரும்புதல்வி வழக்கறிஞர் தேவகுஞ்சரியும் கலந்து கொண்டு ஏற்புரை வழங்குவார் என இரா.மாணிக்கம் தெரிவித்தார்.
மேலும்,தன் வாழ்நாள் முழுவதும் இந்தியச் சமுதாயத்தின் எதிர்காலத்தை சிந்தித்த துன் சம்பந்தன் அன்றைய பிரதமரும் தேச தந்தையுமான துங்கு அப்துல் இரஹ்மானின் நம்பிக்கையை பெற்றவர்களில் முதன்மையானவர் எனலாம்.நாட்டின் மீது அவர் கொண்டிருந்த விசுவாசமும் அரசாங்கத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றும்தான் அவரை ஒருநாள் பிரதமராகவும் இம்மண்ணில் வரலாறு படைத்துள்ளார் எனவும் நினைவுக்கூர்ந்த இரா.மாணிக்கம் இன்றைய தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்கும் இத்தலைவனின் புகழ் ஓங்க வேண்டும் என்னும் உன்னத நோக்கத்தோடு இந்நிகழ்ச்சியினை தாம் ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுத்து வருவதாக கூறினார்.
ஓர் உன்னத தலைவனை நினைவுக்கூறுவதோடு நம் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கும் சேவைக்கும் நன்றி கூறும் வகையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு திரளான மக்களின் வருகையை பெரிதும் எதிர்பார்ப்பதாக இரா,மாணிக்கம் அன்போடு தெரிவித்தார்.

