
கோலாலம்பூர், ஜூன் 16- வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்த நால்வருக்கு சொந்தமான 2 கோடியே 42 லட்சம் வெள்ளி காணாமல் போனது தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த 38 வயதுப் பெண் ஊழியரை சபா மாநிலத்தின் கோத்தா கினபாலுவில் கடந்த வியாழக்கிழமை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மூன்று கைபேசிகள், எட்டு ஏ.டி.எம். கார்டுகள் 4,400 வெள்ளி ரொக்கம் மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தாக புக்கிட் அமான் வர்த்த குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.
அப்பணத்தை மீட்பதற்கான கூட்டுச் சதியில் வங்கியின் உள்ளே உள்ளவர்களோடு வெளியிலுள்ள கும்பல் உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டுள்ளது இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் தாங்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இதில் சம்பந்தப்பட்ட இதர நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Bernama

