
நிபோங் தெபால், ஜூன் 23-
தேர்தலில் களமிறங்கும் வேட்பாளரின் நிறம் பார்த்து தேர்வு செய்யும் வழக்கம் இந்திய வாக்காளர்களிடம் இல்லை என்று பிகேஆர் தேசியத் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் டத்தோ ஆர்.ரமணன் சுட்டிக்காட்டினார்.
தொகுதி மக்களின் எதிர்கால நலன் மீது அதீத கவனம் செலுத்தும் தூர நோக்கு சிந்தனை கொண்டிருக்கும் வேட்பாளருக்கே இந்தியச் சமூகத்தினர் முழு ஆதரவு வழங்குவர் என்று தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சருமான டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
“என்னைக் கேட்டால், நாங்கள் வேட்பாளரின் நிறத்தைப் பார்ப்பதில்லை. அந்த வேட்பாளர் நல்ல கட்சியைச் சேர்ந்தவராகவும், வட்டார மக்களின் நலன் மீது அதிக அக்கறைக் கொண்டவராகவும் இருக்கிறாரா என்பதை பார்த்துதான் நாங்கள் ஆதரவு வழங்குவோம்” என்று நேற்று காலை இங்கு சுங்கை ஜாவி மண்டபத்தில் நடைபெற்ற சுங்கை பாக்காப் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு ஆதரவு வழங்க வந்திருந்த டத்தோ ரமணன், பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
ஜூலை 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்க வேட்பாளருக்கு இந்திய வாக்காளர்கள் முழு ஆதரவு நல்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சுங்கைப் பாக்காப் இடைத்தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் அமினூடின் பாக்கி பயிற்சி மையத்தின் வட கிளை நிறுவன முன்னாள் இயக்குநர் டாக்டர் ஜூஹாரி அரிஃபின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் பாஸ் கட்சியின் நிபோங் தெபால் உதவித் தலைவர் அபிடின் இஸ்மாயில் களமிறங்கியுள்ளார்.
ஒற்றுமை அரசாங்க வேட்பாளரான டாக்டர் ஜூஹாரி அரிஃபின் சிறந்த கல்வியாளர்; மக்கள் தொண்டாளர். அவர் எல்லாச் சமூகத்தின் மீதும் கரிசனம் கொண்டவர். தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு வேலைச் செய்யக்கூடியவராக டாக்டர் ஜூஹாரி இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த டத்தோ ரமணன், சுங்கை பாக்காப் இந்திய வாக்காளர்கள் அவருக்கு பேராதரவு வழங்குவர் என தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.

