
தைப்பிங், புக்கிட் லாருட் பெர்மிஸ் நீர் வீழ்ச்சி பகுதியில் நேற்று நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 28 வயதுடைய S. Jeremy Anthony என்ற ஆடவரின் உடல் இன்று காலை மீட்கப்பட்டதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ரஸ்லாம் அப்துல் ஹமிட் (Razlam Abdul Hamid) தெரிவித்தார். பினாங்கைச் சேர்ந்த ஜெராமி அந்தோனியின் உடல் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது. அவரது உடல் சவப் பரிசோதனைக்காக தைப்பிங் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உல்லாசமாக பொழுதுபோக்குவதற்காக நேற்று மாலை மணி 3.30 அளவில் ஒரு குழுவினரோடு ஜெரெமி அந்தோனி வந்ததாக ரஸ்லாம் தெரிவித்தார். மழை பெய்ததால் அவர்கள் அங்கிருந்து புறப்படத் தயாராகினர். தமது கைப்பையை எடுப்பதற்காக ஆற்றின் மறு கரைப் பகுதிக்கு சென்று திரும்பியபோது ஜெராமி அந்தோனி வழுக்கி ஆற்றில் விழுந்தார். அப்போது நீரோட்டம் வேகமாக வந்ததால் நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக ரஸ்லாம் அப்துல் ஹமிட் தெரிவித்தார். இதனிடையே பெர்மிஸ் நீர்வீழ்ச்சி பகுதியில் மூவர் மாண்டதாக வெளியான தகவலை ரஸ்லாம் மறுத்தார்.நேற்று நடந்த சம்பவத்தில் ஒருவர் மட்டுமே மாண்டதாக அவர் கூறினார்.

