
இவ்வாண்டு 92 லட்சம் சுற்றுப்பயணிகளை மலேசியாவுக்கு வர வைக்க, கலை, பண்பாடு, சுற்றுலா அமைச்சு இலக்கு கொண்டுள்ளது. அதன் இப்புதிய இலக்கு நிறைவேறினால் சுற்றுலாத் துறை வாயிலாக நாட்டுக்கு 2,680 கோடி ரிங்கிட் வருமானம் கிடைக்கும் என அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி (Nancy Shukri) தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் கடந்த ஜூலை மாதம் வரை நாட்டுக்கு 32 லட்சம் சுற்றுப்பயணிகள் வருகை புரிந்திருந்தனர். அதன் வாயிலாகச் சுற்றுலா துறைக்கு 935 கோடி ரிங்கிட் வருமானம் கிடைத்தது. இது அமைச்சின் 45 லட்சம் சுற்றுப் பயணிகள் என்ற இலக்கை ஏறக்குறைய நெருங்கியிருப்பதாக அவர் சொன்னார்.
பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டங்கள், சலுகைகள் போன்றவை வாயிலாகவே அந்த இலக்கை அடைய முடிந்திருப்பதாகக் கூறிய டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி, வர்த்தக நிகழ்ச்சிகள் வாயிலாக அனைத்துலகப் பேராளர்களை இந்நாட்டுக்கு அழைத்து வருவதும் அத்திட்டங்களில் அடங்கும் என்றார்.
அவ்வாறு வியாபார நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் அனைத்துலகப் பேராளர்கள் இங்கு 3 மடங்கு அதிகமாகச் செலவு செய்யக்கூடியவர்களாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த அனைத்துலகப் பேராளர்களில் 60 விழுக்காட்டினர் மீண்டும் நாட்டுக்கு வர விரும்புவதும் கண்டறியப்பட்டிருப்பதாக டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி மேலும் கூறினார்.

