
ரவாங், ஆகஸ்ட் 2-
ரவாங் தமிழ்ப்பள்ளியில் பரபரப்பு
ரவாங் தமிழ்ப்பள்ளியில் கரையான் அரித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பழைய கட்டடத்தை அகற்றி அங்கு புதிய கட்டடம் அமைப்பதற்குப் பதிலாக, பள்ளி விளையாட்டு திடலில் புதிய கட்டடம் கட்டத் திட்டமிடப்பட்டிருப்பது முட்டாள்தனமான முடிவு என மாணவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெற்றோருக்கு எந்தவித முன் அறிவிப்பும் வழங்காமல் பள்ளி திடலில் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறி, இன்று காலை பள்ளி முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த கல்வியாண்டில் முதலாம் ஆண்டு வகுப்பில் சுமார் 160 மாணவர்கள் சேரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆறு வகுப்பறைகள் கொண்ட இரு மாடிக் கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய கட்டடம் அவசியம் என்பதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் அதை பள்ளி திடலின் ஒரு பகுதியில் கட்டுவதையே எதிர்ப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கட்டடத்தின் மொத்த செலவு சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் எனக் கூறப்படுகிறது. நிர்மாணப் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதத்தில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய பெற்றோருமான செந்தில்குமார் பழனியப்பன் கூறுகையில், ஏற்கனவே கரையான் அரித்து மோசமான நிலையில் உள்ள பழைய கட்டடத்தை அகற்றி அதே இடத்தில் புதிய கட்டடம் அமைப்பதே சிறந்த தீர்வாக இருக்கும் என்றார்.
பெற்றோர்களும் பொதுமக்களும் பல ஆண்டுகளாக பராமரித்து வரும் பள்ளி திடலில் கட்டடம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
போராட்டத்தில் பெற்றோருக்கு ஆதரவாக கலந்து கொண்ட ரவாங் இந்து சங்கத் தலைவர் டத்தோ சுரேஷ் ராவ், பள்ளியில் எந்தவொரு மேம்பாட்டுத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு முன்பு பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்றார்.
அவ்வாறு செய்யாமல் எடுக்கப்படும் முடிவுகள் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பள்ளிக்கு புதிய கட்டடம் தேவை என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆனால், அதனை விளையாட்டு திடலில் அமைப்பது சரியான முடிவு அல்ல,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோரின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிய ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் வருகை தந்தார். அப்போது பெற்றோர்கள் தங்களது ஆதங்கங்களை அவரிடம் நேரடியாக தெரிவித்தனர்.
இந்த விவகாரத்திற்கு சுமுகமான தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அவர் உறுதியளித்தார்.
இதனிடையே, செலாயாங் மஇகா தொகுதித் தலைவர் எம். பி. ராஜா கூறுகையில், புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை என்றாலும், அது மாணவர்களின் தினசரி பயன்பாட்டிலுள்ள விளையாட்டு திடலில் அல்லாமல், பொருத்தமான இடத்தில் கட்டப்பட வேண்டும் என்றார்.
ரவாங் வீரக்கத்தி விநாயகர் ஆலயத் தலைவர் டத்தோ பாலாவும் பெற்றோருக்கு ஆதரவு தெரிவித்து, பள்ளி நிர்வாகம் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து பல ஆண்டுகளாக பராமரித்து வரும் பள்ளி திடலில் கட்டடம் அமைப்பது பொருத்தமல்ல என்றும், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள், தங்களது மனவேதனையையும் எதிர்ப்பையும் ஊடகங்களிடம் வெளிப்படுத்தினர்.

