
ரவாங், ஆகஸ்ட் 2 –
ரவாங் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டு திடலில் புதிய கட்டடம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, அதற்கு மாற்றாக அப்பள்ளியை காலை மற்றும் மதியம் என இரு அமர்வுகளைக் கொண்ட பள்ளியாக மாற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெற்றோர்களின் ஆதரவு கிடைத்தால்தான் இந்த இரு அமர்வு முறையை நடைமுறைப்படுத்த முடியும் என்றும், அதன் மூலம் பள்ளியின் விளையாட்டு திடலை பாதுகாக்க முடியும் என்றும் பெற்றோரும், அப்பள்ளியின் முன்னாள் மாணவருமான செந்தில்குமார் பழனியப்பன் தெரிவித்தார்.
மாநில கல்வி இலாகா (Jabatan Pendidikan Negeri) இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, பள்ளியை இரு அமர்வுகளாக மாற்றுவதற்கு பெற்றோர் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது சுமார் 986 மாணவர்கள் பயிலும் நிலையில், அவர்களை காலை மற்றும் மதியம் என இரு அமர்வுகளாகப் பிரித்தால் இடப்பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
மேலும், விளையாட்டு திடலில் கட்டப்படவிருந்த இரு மாடிக் கட்டடத்தில் கழிப்பறை வசதி இடம்பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, கரையான் அரித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிய வகுப்பறைகள் அமைப்பதற்குப் பதிலாக ஆசிரியர்களுக்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க பள்ளி நிர்வாகம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆசிரியர்களின் நலனுக்காக வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு தங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், அதற்காக பள்ளியின் விளையாட்டு திடலை பாதிக்கக் கூடாது என்று பெற்றோர் வலியுறுத்தினர். பள்ளியின் பின்புறத்தில் பயன்பாட்டுக்கு உகந்ததல்லாத பழைய கட்டடத்தை அகற்றி, அந்த இடத்தில் வாகன நிறுத்துமிடத்தை அமைக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், பள்ளியில் தொடர்ந்து ஏற்படும் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் பள்ளி நிர்வாகத்துக்கும் பெற்றோருக்கும் இடையே போதுமான தகவல் பரிமாற்றம் இல்லாததுதான் என்றும் செந்தில்குமார் சுட்டிக்காட்டினார்.
இரு அமர்வு முறை அமல்படுத்தப்பட்டால் மாணவர்களின் இடநெருக்கடி மட்டுமின்றி, பள்ளி வளாகத்தில் தற்போது நிலவி வரும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
தற்போது பள்ளியை இரு அமர்வுப் பள்ளியாக மாற்றுவது தொடர்பாக பெற்றோரின் கருத்துகளையும் ஒப்புதலையும் பெறும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பள்ளியின் விளையாட்டு திடலை பாதுகாத்து, முன்புபோல் மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகளிலும் போட்டிகளிலும் ஈடுபடும் சூழலை உறுதி செய்ய அனைவரும் இரு அமர்வு திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, இன்று காலை பள்ளி விளையாட்டு திடலில் கட்டடம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பள்ளிக்கு வந்த மாநில கல்வி இலாகா அதிகாரிகள் பெற்றோருடன் கலந்துரையாடி, பள்ளியை காலை மற்றும் மதியம் என இரு அமர்வுகளாக மாற்றும் யோசனையை முன்வைத்ததுடன், அதனை செயல்படுத்த தேவையான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

