
மாலிம் நாவார்,ஜூலை15:
சிறந்த அடைவுநிலையை கொண்டிருக்கும் மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் வாய்ப்பு அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஒற்றுமை அரசாங்கம் சரியான இலக்கில் பயணிப்பதாகவும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அது உறுதியாக இருப்பதாகவும் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி தெரிவித்தார்.
எஸ்.பி.எம் தேர்வில் 10ஏ பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்படும் என அண்மையில் கல்வி அமைச்சும் அதனை உறுதி அளித்து அறித்திருந்தது தங்களின் உயர்கல்வியை தொடரவிக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கையையும் நிறைவையும் அளித்திருப்பதாக மேலும் அவர் கூறினார்.மேலும்,இந்த அறிவிப்பும் வாய்ப்பும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அங்கீகாரமாக இருப்பதோடு அவர்களின் சிறந்த கல்வி பயணத்திற்கான உத்தரவாதமாகவும் நம்பிக்கையாகவும் அமைந்திருப்பதாக குறிப்பிட்டார்.
நாட்டின் கல்வி தரத்தை மேம்படுத்தவும் அதனை சிறந்த நிலையில் உருவாக்குவதற்கும் இலக்கு கொண்டிருக்கும் மடானி அரசாங்கத்தின் கொளகையின் ஓர் அங்கமாக உயிர்பெற்றிருக்கும் கல்வி மேம்பாட்டில் மெட்ரிகுலேஷன் வாய்ப்பும் அடங்கும் என்று விவரித்த சட்டமன்ற உறுப்பினர் சிறந்த கல்விச் சூழல்,அனுபவம் மிக்க விரிவுரையாளர்கள்,தரமான பாடத்திட்டம் என வரையறுக்கப்பட்டிருக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி மாணவர்களின் கல்வி பயணத்தின் நம்பிக்கையாக திகழ்கிறது என்றார்.
அதுமட்டுமின்றி,அரசாங்கம் வழங்கிடும் வாய்ப்பில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தங்களின் கல்வியை சரியான இலக்கில் அமைத்து கொள்ள பெரும் வாய்ப்பு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்குரிய நன் வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.அரசாங்கத்தின் வாய்ப்பும் வழிகாட்டுதலும் மாணவர்களை அவர்களின் உயர்கல்வியில் சிறந்த அடைவுநிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் தெரிவித்தார்.
இதுவரை சுமார் 4877 மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்விக்கு விண்ணப்பம் செய்திருந்த நிலையில் முதல்கட்ட தேர்வாக கடந்த ஜூன் 20ஆம் தேதி 3684 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.அதனை தொடர்ந்து மேலும் 400 மாணவர்களுக்கு ஜூலை 5ஆம் தேதி வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை சுட்டிக்காண்பித்த சட்டமன்ற உறுப்பினர் எஞ்சியுள்ள 712 மாணவர்களுக்கான வாய்ப்பு வரும் ஆகஸ்ட் மூன்றாவது வாரம் உறுதி செய்யப்படும் எனவும் அவர் விவரித்தார்.
முன்னதாக,பல்கலைக்கழகங்களுக்கான நுழைவு ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் அறிவிப்புகள் வரும் நிலையில் மெட்ரிகுலேஷன் வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்கள் பொது பல்கலைக்கழகத்தில் தங்களின் உயர்கல்வியை தொடர முன்வரவேண்டும்.அல்லது மெட்ரிகுலேஷன் வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும் என்றார்.மேலும்,10ஏ பெற்றும் மெட்ரிகுலேஷன் வாய்ப்பில் விடுப்பட்ட மாணவர்கள் தங்களின் கோரிக்கையை கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார்.
அதேவேளையில்,அனைவருக்கும் பாகுபாடு அற்ற ஒரே கல்வியல் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி துணை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்த பவானி 10ஏ பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிட்டுவதை கல்வி அமைச்சு உறுதி செய்யவும் வேண்டும் என கேட்டுக் கொண்டார்.அம்மாணவர்களின் எதிர்காலம் சிறக்க இக்கல்வி வாய்ப்பு இன்றியமையாத தேவையாகிறது என்றார்.

