

கோலாலம்பூர் ஜூலை 20
கவிதை என்பது கண்களில் கண்ணீரை வரவழைக்கும். இதயத்தை நனைக்கக் கூடியது என்கிறார் மஇகா தேசிய துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் .
இதையும் தாண்டி கவிதை என்பது ஒரு சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றக்கூடியது. அந்த அளவு படிப்பவர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருத்தல் வேண்டும் என்றார் .
மனதில் தோன்றும் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய தன்மை கவிதை வரிகளுக்கு உண்டு . ஒரு கவிதையை வடிப்பவர் ஒரு பிரசவ வேதனையை அனுபவிப்பது போல் ஆகும் என்று இங்குள்ள மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் ரய்லி முனியாண்டியின் ‘காலம் சொல்லும் கவிதை 100’ நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமையேற்று உரையாற்றுகையில் குறிப்பிட்டார் .
எழுத்தாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் . அப்போதுதான் அடுத்த தலைமுறையினர் எழுதத் தொடங்குவார்கள் என்றார் மலேசிய கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான சரவணன் .
இளம் தலைமுறையினரை எழுத்து அல்லது கவிதைத் துறையில் ஈடுபட ஊக்கப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பாடல் என்பது தேவையில்லாமல் போய்விடும் என்றார் .
ஆகையால், கவிஞர் ரய்லி இளைஞர்களை அதிகளவில் கவர்வதற்கத் தொடர்ந்து கவிதைகளைப் படைக்க வேண்டும் என்று சரவணன் கேட்டுக் கொண்டார் .
கவிமாறன் அறிவிப்பு பணியை மேற்கொண்ட இந்நிகழ்ச்சியில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க துணைத் தலைவர் விஜயராணி செல்லப்பா அனைவரையும் வரவேற்றுப் பேசினார் .
இதனைத் தொடர்ந்து இச்சங்கத்தின் அயலக தொடர்பு பிரிவு பொறுப்பாளர் ராஜேந்திரன், தன்முனைப்பு பேச்சாளர் ரே. கோ. ராசுவின் புதல்வி குணமலர், பாடலாசிரியர் கொக்கோ நந்தா ஆகியோர் உரையாற்றினர் .
முனைவர் இரா. குமரன் வேலுவின் மதிப்புரை நூலாசிரியரின் கவிதை வரிகளின் சிறப்புகளை நன்கு எடுத்துரைத்தது.
இந்நிகழ்ச்சியில் தனது கவிதைப் பயணம் குறித்து நூலாசிரியர் ரய்லி சுவைபட விவரித்தார்.
டத்தோஸ்ரீ சரவணன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் முதல் நூலை தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பி.சகாதேவன் பெற்றுக் கொண்டார்.
தமிழ் ஆர்வர்கள் பலரும் இக்கவிதை நூலை வாங்கி நூலாசிரியருக்கு தங்களின் ஆதரவைப் புலப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் தீனா, ஜாகர்த்தா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் விசாகன் ஆகியோரும் வருகை புரிந்தனர் .

