
கோலாலம்பூர், ஏப்ரல் 28 –
நாட்டின் இந்தியச் சமுதாயத்தின் ஆன்மீக மற்றும் சமூக மேம்பாட்டிற்காக, ‘தர்ம மதானி’ (Dharma MADANI) திட்டத்தின் கீழ் இதுவரை 462 இந்து ஆலயங்களுக்கு மொத்தம் 9.24 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இன்று பிரிக்பீல்ட்ஸ், கலாமண்டபத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், 300 ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட் நிதியுதவிக்கான ஒப்புதல் கடிதங்களை வழங்கிப் பேசிய அவர், மடானி அரசாங்கத்தின் இந்த வெளிப்படையான உதவித் திட்டங்கள் இந்தியச் சமூகத்தின் அடித்தளம் வரை சென்றடைவதை உறுதிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

துல்லியமான தரவுகள் மற்றும் ஆலயங்களுக்கான வழிகாட்டுதல் குறித்து விளக்கிய அமைச்சர், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முதற்கட்ட அமலாக்கத்தில் 162 ஆலயங்களுக்கு 3.24 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று இரண்டாம் கட்டமாக மேலும் 300 ஆலயங்கள் தலா 20,000 ரிங்கிட் நிதியைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது 341 விண்ணப்பங்கள் ஆவணக் குறைபாடுகளால் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவொரு விண்ணப்பத்தையும் அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

மாறாக, அந்த ஆலய நிர்வாகங்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கி, ஆவணங்களைப் பூர்த்தி செய்ய உதவுமாறு மித்ரா (MITRA) அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். தகுதியுள்ள அனைத்து ஆலயங்களும் இந்தத் திட்டத்தின் பலனை அடைவதை உறுதி செய்வதே அமைச்சின் முதன்மை நோக்கமாக உள்ளது.
மித்ரா அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவரித்த அமைச்சர், அந்த அமைப்பின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் மூலம் இந்தியச் சமூகத்திற்கான ‘ஒருங்கிணைந்த சேவை மையம்’ (One-Stop Centre) ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இம்மையத்தின் வாயிலாக அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்களை இந்தியச் சமூகம் மிக எளிதில் பெற முடியும்.
குறிப்பாக எச்.ஆர்.டி கார்ப்பரேஷன் கீழ் உள்ள ‘வெற்றி மடானி’ (Vetri Madani) போன்ற பலருக்கும் சென்றடையாத முக்கியத் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த மையம் ஒரு பாலமாக அமையும் என அவர் விளக்கமளித்தார்.

மேலும் வரும் 2026-ஆம் ஆண்டிற்கான புதிய இலக்குகளாக, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேகப் பயிற்சி வகுப்புகள், தமிழ்ப்பள்ளிகளுக்கான டிஜிட்டல் கல்வி உபகரணங்கள் மற்றும் இந்திய இளைஞர்களின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் வெளிநாடுகளில் உயர்தர தொழில்நுட்பப் பயிற்சிகளை (International TVET) மேற்கொள்வதற்கான வாய்ப்புகளையும் மித்ரா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இவற்றுடன் உயர்கல்வி மாணவர்களுக்கான நிதி உதவித் திட்டங்கள் மற்றும் சமூகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் இலக்கு வைக்கப்பட்ட சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் மித்ராவின் வருங்காலப் பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ளன.
மடானி அரசின் சாதனைகளை ஒரு பார்வையில் விவரித்த அமைச்சர், இந்தியச் சமூகத்தின் மீதான அவதூறுகளைத் தரவுகளால் முறியடித்தார்.

கடந்த 2023-இல் 608 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த நேரடி ரொக்க உதவி (STR/SARA), வரும் 2025-இல் 1 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் கல்வி மேம்பாட்டிற்காக 200 தமிழ்ப்பள்ளிகளுக்கு 8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கல்வி மடானி டியூஷன் வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘ஸ்மார்ட் போர்டு’ வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 2023 முதல் 341 இந்து ஆலயங்களின் பராமரிப்பிற்காக (RIBI) 46.24 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தர்மம் செய்தால் தெய்வம் துணை நிற்கும்” என்ற பொன்மொழியுடன் தமது உரையை நிறைவு செய்த அமைச்சர் ரமணன், இந்த நிதி ஒதுக்கீடுகளை இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் சமூக நலனுக்காக முழுமையான பொறுப்புடன் பயன்படுத்துமாறு ஆலயத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

