
ஈப்போ, ஜுலை.23: மலேசியாவிற்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி, இவ்வாரத்தில் 27 மற்றும் 28 ம் தேதிகளில் இரு நாட்களுக்கு ஈப்போ மாநகருக்கு சிறப்பு வருகை மேற்கொள்கிறார்.
இந்திய வம்சாவழியினரின் வாழ்வாதாரம் மற்றும் கலை கலாச்சாரம் குறித்து கண்டுகளித்து மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஈப்போவிற்கு வருகிறார் என்று மலேசிய இந்திய பாரம்பரிய இயக்கத்தின் பேராக் மாநில தலைவர் மு.விவேகானந்தன் கூறினார்.
வரும் சனிக்கிழமை 27 ம் தேதியன்று, பெர்சாம் யாயாசான் பேராக்கில் மாலை 3.00 மணிக்கு இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு மற்றும் கண்காட்சியில் இந்திய தூதர் கலந்துக்கொள்கிறார்.
இந்நிகழ்வில் சுமார் 400 பேர் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பதிவு மதியம் 1.00 மணிக்கு தொடங்கிவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் நான்கு முக்கிய பேச்சாளர்கள் இந்நாட்டின் இந்திய தலைவர்கள் மற்றும் சான்றோர்களின் மக்கள் சேவை குறித்து எடுத்துரைப்பார்கள்.
அவர்களில் தேசிய நில நிதி கூட்டுறவு கழகத்தை நிறுவிய மற்றும் சுதந்திர தந்தைகளின் ஒருவரான துன் வீ தி சம்பந்தன் பற்றி அவரது புதல்வி வழக்கறிஞர் குஞ்சரி சம்பந்தன் அவரது தந்தை குறித்து உரையாற்றுவார் என்று அவர் கூறினார்.
அதுமட்டுமன்றி, மகப்பேறு மருத்துவர் முனைவர் வ.ஜெயபாலன் பேராக் இந்தியர்களின் மேம்பாட்டு பங்கு பற்றி விளக்கமளிப்பார்.
ஈப்போ மாநகரின் வளர்ச்சி குறித்து சீனிவாசகம் சகோதரர்கள் குறித்த வரலாற்று பதிவுகள் பற்றி தேரன்ஸ் நேத்தோ பேசுவார்.
அதோடு, சிவில் கார்த்திகேசு குறித்து லாவ் சியாக் வோங் இந்த நிகழ்வில் பேசுவார் என்று மு. விவேகானந்தன் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் மலேசிய சினிமாத்துறையில் இந்தியர்களின் பங்களிப்பு குறித்து கண்காட்சியும், கானொளியும் வருகையாளர்கள் பார்வைக்கு காட்டப்படும்.அதற்கான ஏற்பாடுகளை பினாஸ்(FINAS) கவனித்துக்கொள்வார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மறுநாள் 28 ல் ஞாயிற்றுக்கிழமை, காலை மணி 7.00 க்கு இந்திய தூதர் ஜாலான் லகாட் தண்டாயுதபாணி ஆலயத்திற்கு சிறப்பு வருகை மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து புந்தோங் ஐ. ஆர். சி. கிளப்பிற்கு சென்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
அதன் பின், புந்தோங் கடலை வியாபாரிகளின் வளாகத்தை பார்வையிடுகிறார். அத்துடன், இந்த புந்தோங் பகுதியில் சாலையின் பெயர்கள் இந்திய நாட்டு சாலைகளின் பெயர்கள் கொண்ட சாலைகளையும் அவர் பார்வையிடவுள்ளார் என்று இந்நிகழ்வின் இணை ஏற்பாட்டுக்குழு தலைவரும், பேராக் இந்திய வர்த்தக சபையின் தலைவருமான ரவிசங்கர் கூறினார்.
இறுதியாக, இந்திய தூதர் ஈப்போ லிட்டல் இந்தியா வளாகம், ஈப்போ பாடாங், இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் போன்ற இடங்களை நேரடியாக பார்வையிடுகிறார். பின் மதிய உணவை பேராக் இந்திய வர்த்த்க சபையின் பணிமனையில் வழங்கி, அவருக்கு சிறப்பு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த இரு நாள் நிகழ்வில் பேராக் வாழ் இந்திய சமூகத்தினர் கலந்துக்கொள்ள ஏற்பாட்டுக்குழுவினர் அன்போடு அழைக்கின்றனர்.

