
ஷா ஆலம், ஜூலை 26- மாநில அரசிடமிருந்து மானியம் பெற்ற ஆலயங்கள் சமய வளர்ச்சிக்கான நடவடிக்கைகளோடு வட்டார மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு கேட்டுக் கொண்டார்.
தங்கள் பகுதிகளில் உள்ள மாணவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காகக் கொண்டு உதவித் திட்டங்களை ஆலயங்கள் அமல்படுத்தலாம் என அவர் ஆலோசனை கூறினார்.
தங்கள் சக்திக்கு ஏற்ற வகையில் சிறிய அளவில் செய்யும் இத்தகைய உதவிப் பணிகள் வாயிலாக சமூகத்திற்கான ஆலயங்களின் பங்களிப்பை உறுதி செய்ய முடியும் என்பதோடு சம்பந்தப்பட்ட ஆலயங்கள் மேலும் வளர்ச்சி காண்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தின் ஜூப்ளி பேராக் அரங்கில் நடைபெற்ற ஆலயங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

