
2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது 2வது நாளான இன்று பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனு பாக்கர் (வயது 22) பங்கேற்றார
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் மனு பாக்கர் 3ம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவு இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 221.7 புள்ளிகள் பெற்று 3ம் இடம் பிடித்தார்
ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அதேபோல் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் “ஒரு வரலாற்றுப் பதக்கம்..! பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக வாழ்த்துக்கள்,
மானு பாக்கர். இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது. நம்பமுடியாத சாதனை..” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

