

செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் ஆக 6-
வணிகத் துறையில் அதிகமான இந்தியர்களை ஈடுபடச் செய்வதிலும், அவர்களின் வியாபாரத்தை அடுத்த நிலைக்கு உயர்த்துவதிலும் தீவிர முனைப்புச் செலுத்தி வரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை அமைச்சு இன்று மேலும் பலருக்கு தெக்குன் ஸ்பூமி கடனுதவியை வழங்கி பேருதவி புரிந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரை 135 தொழில் முனைவோருக்கு 56 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று அதன் துணை அமைச்சர் டத்தோ ஆர் இரமணன் தெரிவித்தார்
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 26,726 இந்திய தொழில் முனைவோருக்கு 46 கோடியே 28 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுத் துறை அமைச்சின் கண்காணிப்பில் உள்ள தெக்குன், அமானா இக்தியார் (ஏ.ஐ.எம்), பேங்க் ராக்யாட் ஆகிய நிதியகங்கள் வழி, இந்திய தொழில் முனைவோர்களுக்குப் பிரத்தியேக வியாபாரக் கடனுதவிகளை வழங்கி வருகிறோம்.
‘தெக்குன் ஸ்புமி’ நிதியகப் பிரிவின் கீழ், புதிதாய் ‘தெக்குன் ஸ்புமி கோஸ் பிக்’ எனும் இன்னொரு வியாபாரக் கடனுதவி களத்தை உருவாக்கி, அதன் கீழ் 3 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து, பெண் தொழில் முனைவோர்களுக்கான அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) நிதியகத்தின் கீழ், இந்தியப் பெண்களுக்காகப் “பெண்” (P.E.N.N) எனும் புதிய வியாபாரக் கடனுதவியை அறிமுகம் செய்து, கூடுதலாக 5 கோடி வெள்ளியும் வழங்கப்பட்டது.
அதோடு நில்லாமல், பேங்க் ராக்யாட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய தொழில்முனைவோர்களுக்காகப் ‘பிரிஃப்-ஐ’ (BRIEFF-I) எனும் புதிய கடனுதவி திட்டத்தை அறிமுகம் செய்து, பிரத்தியேகமாக 5 கோடி வெள்ளி நிதியையும் வழங்கப்படுகிறது.
மேலும் 3 கோடி வெள்ளியாக இருந்த தெக்குன் கடனுதவி இப்போது 6 கோடி வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழி குறைந்தது 2,000 இந்திய தொழில் முனைவோருக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் சொன்னார்.
மடானி அரசாங்கத்தின் மூலமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சமுதாயத்தின் நலன் கருதி பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறார் என்று டத்தோ ஆர் இரமணன் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூர் பிரிமேரா தங்கும் விடுதியில் நடைபெற்ற தெங்குன் ஸ்பூமி கடனுதவி வழங்குவது தொடர்பாக நேரடி கலந்துரையாடல் நிகழ்வுக்கு தலைமை ஏற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

