வங்காளதேசத்தில் சிறுபான்மை மக்கள் மீது வன்முறை தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! டத்தோ டாக்டர் லோகபாலா அறைகூவல்

கோலாலம்பூர் ஆக 13-
வங்களாதேசத்தில் கடந்த சில நாட்களாக இந்துக்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பெரும் வேதனையை அளிப்பதாக மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான வன்முறை, திட்டமிட்ட கொலை, சொத்துக் கொள்ளை போன்ற சம்பவங்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வங்காளதேசத்தின் சிறுபான்மை இந்துக்களுடன் இந்தியா உட்பட பல நாடுகள் துணை நிற்க வேண்டும்.

வங்காளதேசத்தில் இந்துக்களின் வீடுகள், கோவில்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தீவிரவாத இயக்கம் குறிவைத்து தாக்குதல் நடத்துவது மிகவும் வெட்கக்கேடானது.

அங்குள்ள இந்து சகோதரர்களின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறலுக்கு எதிராக மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.

பாலஸ்தீன மக்கள் உட்பட பல நாடுகளில் நிகழும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் துணிந்து போராடுகிறார்.

அந்த வகையில் தற்போது அமைந்துள்ள வங்களாதேச இடைக்கால அரசுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வன்முறை கொடுமைகளை தடுத்து நிறுத்த குரல் கொடுக்க வேண்டும் என டத்தோ டாக்டர் லோகபாலா வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே வங்களா தேசத்தில் சிறுபான்மை மக்களை அடித்து துன்புறுத்தும் கொடூர காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பார்க்கும்போது நெஞ்சை பதர வைக்கிறது என்று மைபிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

இந்தக் கொடூர செயல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
அதே சமயம் இந்த தாக்குதலை நடத்தும் தீவிரவாத கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles