கல்வியல் மேம்பாட்டில் மலேசிய மாணவர்கள் உலகளாவிய நிலையில் முத்திரை பதிக்க வேண்டும் – சிவநேசன் வேண்டுக்கோள்!!

தாப்பா, செப் 1- மலேசியாவின் கல்வி தரமும் அதன் மேம்பாடும் தனித்துவமான நிலையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கும் நிலையில் மலேசிய மாணவர்களின் கல்வியல் மேம்பாடும் அவர்களின் தனித்துவ திறனும் உலகளாவிய நிலையில் முத்திரை பதிக்க வேண்டும் என மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்திய நலன்பிரிவிற்காக ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் வேண்டுக்கோள் விடுத்தார்.

உலகளாவிய நிலையில் மலேசியா அதன் கல்வி செயல்பாடுகளையும் தரமேம்பாட்டையும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புத்துயிர் அளித்து வருவதோடு அதில் காலத்திற்கேற்ற உருமாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறோம் என்றும் விவரித்த அவர் சிறந்த கல்வியாளர்களாய் மலேசியர்களின் மேம்பாடும் வளர்ச்சியும் சரியான இலக்கில் பயணிப்பதாகவும் கூறினார்.

தாப்பா ரோட் கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளியில் அப்பள்ளியும் பத்தாங் பாடாங் மாவ்ட்ட கல்வி இலாகாவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த in-STEM எனப்படுக் அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் கணிதம் கண்காட்சியை தொடக்கி வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதேவேளையில்,நம் மாணவர்கள் அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,கணிதம் ஆகியவற்றில் தனித்திறனையும் ஆளுமையையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் அதுபோல் ஆங்கிலத்திலும் சிறந்த ஆற்றலை கொண்டிருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும்,4.0 தொழில்புரட்சி குறித்தும் விவரித்த அவர் தொழில்கல்வியிலும் நம் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.தொழில் கல்விக்கான வாய்ப்புகள் நாட்டிலும் பேரா மாநிலத்திலும் அதிகமாகவே இருப்பதாகவும் அவ்வாய்ப்பினை நம் மாணவர்கள் நன்நிலையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

In-STEM கண்காட்சியினை தொடக்கி வைத்ததோடு மட்டுமின்றி கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளியின் கருவூல மையத்தின் வலையொலி அகப்பக்கத்தையும் அவர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

மேலும்,கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளியின் பாலர்பள்ளி சீரமைப்புப் பணிக்காக வெ.25 ஆயிரமும் மாவட்ட நிலையிலான ஆங்கில வாதிடம் (Debate) போட்டிக்கு வெ.30 ஆயிரமும் வழங்குவதாக உறுதியும் அளித்தார்.

மிகவும் சிறப்பான நிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி திரு.ஓஸ்மான் பஹாரியோடு இம்மாவட்டத்தை சார்ந்த ஆசிரியர்கள்,தலைமையாசிரியர்களோடு மலாய்,சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் பாலர்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles