
பினாங்கு, செப் 16-
சபா, லாஹாட் டத்துவில் உள்ள மருத்துவமனையில் இரசாயன உடற்கூறு பிரிவின் தலைவராக இருந்த Dr Tay Tien Yaa பணியிட பகடிவதையால் தற்கொலை செய்து. கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி தனது வாடகை வீட்டில் அவர் இறந்து கிடந்ததாகஅவரின் சகோதரர் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் தான் என் அக்கா அம்மருத்துவமனைக்கு மாற்றலாகி சென்றார்.
எனினும் வேலைக்கு அப்பாற்பட்டு அவருக்குப் பணிச்சுமை அங்கு அதிகம்.
உடற்கூறு துறையைத் தலைமையேற்பதே பெரிய வேலை; அது போதாதென்று உபகரணங்களைப் பரிசோதிப்பது, அடிக்கடி கூட்டங்களில் பங்கேற்பது, அறிக்கைத் தயாரிப்பது என கூடுதல் வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு அவர் ஆளானதாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
அதோடு துறைத் தலைவரும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தொழிலாளர்களை மோசமாக நடத்தினார்.
அக்காவின் மன உளைச்சல் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தால் நிச்சயம் எதையாவது செய்திருக்க முடியும் என்று சகோதரர் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த தருணத்தில் இந்த செய்தியை படித்து தாம் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக ஜசெகவை சேர்ந்த செனட்டர் டாக்டர் லிங்கேஷ்வரன் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
நாம் ஓர் இளம் மருத்துவரை நாம் இழந்துள்ளோம்.
பணியிடங்களில் நடக்கும் பகடிவதைகளை நியாயமாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்க,முந்தைய அரசாங்கத்தின் கீழ் பணிக் குழு அமைக்கப்பட்டது.
அதன் ஆய்வறிக்கை என்னவாயிற்று? பகடிவதைப் பிரச்சைக்கு என்ன தான் தீர்வு? இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்கப் போகிறோம் அவர் கேள்வியை எழுப்பியுள்ளார்.
எனவே சுகாதார அமைச்சர், சுகாதார தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் தீவிர கவனம் செலுத்தி இது போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென டாக்டர் லிங்கேஸ்வரன் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

