
சிரம்பான், அக். 8- குற்றச்செயலில் சம்பந்தப் பட்டுள்ளதாக போலீஸ்காரர்
என கூறிக் கொண்ட நபர் ஒருவர் தொலைபேசி வழி விடுத்த மிரட்டலால்
அச்சமடைந்த கட்டுமான நிறுவன அதிகாரி ஒருவர் தனது சேமிப்புத்
தொகையான 280,000 வெள்ளியை மோசடிக் கும்பலிடம் பறிகொடுத்தார்.
ஜெம்புல் மாவட்டத்தின் பகாவ் நகரைச் சேர்ந்த அந்த 32 வயது பெண்ணை
தொடர்பு கொண்ட மக்காவைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்
கூறிக் கொண்ட ஆடவர் ஒருவர், வங்கி அட்டையை வாடகைக்கு
விட்டதோடு சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக
அப்பெண்ணை மிரட்டியுள்ளார் என்று ஜெம்புல் மாவட்ட போலீஸ்
தலைவர் சூப்பரின்டெண்டன்ட் ஹூ சாங் ஹூக் கூறினார்.
அப்பெண் இ குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
எனினும், அந்த தொலைபேசி இணைப்பு மலாக்கா மாநில போலீஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி எனக் கூறப்படும் நபருக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த அதிகாரி, தம் வசம் 200 அடையாள அட்டைகள் உள்ளதாகவும் அதில்
ஒன்று உங்களுடையது எனவும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை அப்பெண் மறுபடியும் மறுத்த வேளையில் இந்த
விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படுவதாக அந்த
அதிகாரி கூறியுள்ளார் என்று ஹூ அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடவில்லை என்பதை உறுதி
செய்வதற்கு ஏதுவாக கணக்கு தணிக்கை செய்வதற்கு வங்கியிலுள்ள
பணம் அனைத்தையும் வேறு கணக்கிற்கு மாற்றும்படி அந்த பெண்ணுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த நபர் கூறியபடி அப்பெண் 280,000 வெள்ளியை ஆறு வெவ்வேறு
வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
இருந்த போதிலும் மேலும் பணத்தை செலுத்தும்படி அவ்வாடவர் நிர்பந்தித்ததைத் தொடர்ந்து அப்பெண் சந்தேகம் கொண்டதாக அவர் சொன்னார்.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் மலாக்கா மாநில போலீஸ்
தலைமையகத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தித்ன 302 வது பிரிவின் கீழ் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.