
அம்பாங், அக். 8- இம்மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அச்சு முறுக்கு சுடும் போட்டி
தெரத்தாய் மற்றும் பாண்டான் இண்டா தொகுதி இந்திய சமூகத்
தலைவர்களின் ஏற்பாட்டில் நேற்று வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
தெராத்தாய் சட்டமன்ற இந்திய சமூகத் தலைவர் கே.சரஸ்வதி மற்றும்
பாண்டான் இண்டா தொகுதி இந்திய சமூகத் தலைவர் சி. மோகன் ராஜ்
பெரும் முயற்சியில் பாண்டான் பெர்டானா, பிளட் எல்.சி. 700 அடுக்குமாடி
குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் யீ ஜியா ஹார் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய யீ, தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு
நடத்தப்படும் இத்தகைய பாரம்பரிய பலகாரங்களைச் தயாரிக்கும்
நிகழ்வுகளில் பிற இனத்தினரின் பங்கேற்பையும் உறுதி செய்யும்படி
கேட்டுக் கொண்டார்.
இது போன்ற நிகழ்வுகளை முகிபா அடிப்படையில் நடத்துவதன் மூலம்
இத்தகைய குடியிருப்பாளர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும்
அதேவேளையில் பாரம்பரிய பலகாரங்களை தயாரிக்கும் முறையை பிற
இனத்தினரும் அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும்
என்று அவர் ஆலோசனை கூறினார்.
இந்த நிகழ்வை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக்
குழுவினரை பெரிதும் பாராட்டிய அவர், வரும் காலங்களில் தொகுதி
அளவில் இப்போட்டியை தொகுதி அளவில் பிருமாண்டமான முறையில்
நடத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும்படி ஏற்பாட்டாளர்களைக்
கேட்டுக் கொண்டார்.
குடும்ப உறுப்பினர்களை உட்படுத்திய இந்த குழுப் போட்டியில்
பெண்களோடு ஆண்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
.
இதன் மூலம் குடும்ப உறவுகளை வலுப்படுத்த இயலும் என்று அவர்
தெரிவித்தார்.
இதனிடையே, மாத இறுதியில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிக்கு
தயாராகும் வகையிலும் கொண்டாட்ட உணர்வை பொது மக்கள் மத்தியில்
ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த போட்டி நடத்தப்பட்டதாக தெராத்தாய்
தொகுதி இந்திய சமூகத் தலைவர் சரஸ்வதி குறிப்பிட்டார்.
இந்த போட்டியில் இரு பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 20 குழுக்கள்
பங்கேற்று முறுக்கு சுடுவதில் தங்களின் திறனை வெளிப்படுத்தியாக
அவர் தெரிவித்தார்.