
ஈப்போ,அக் 9-
ஈவூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி நாட்டின் 530ஆவது தமிழ்ப்பள்ளியாக பிரதமரால் திறந்து வைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக கூறிய பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் நாட்டில் எந்தவொரு இனமும் தத்தம் தாய்மொழியை கற்பதிலும் தாய்மொழி வழி கல்வியை மேற்கொள்வதற்கும் எவ்வித தடையும் இல்லை என்பதை இந்நிகழ்வு மீண்டும் உறுதி செய்திருப்பதாக கூறினார்.
அனைவருக்கும் கல்வி.தாய்மொழி பள்ளிகள் காக்கப்படும் என்னும் மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒப்ப இந்நிகழ்வு அமைந்திருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளையில்,நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருந்த எதிர்பார்ப்பு ஒன்று பூர்த்தியானதில் இந்திய சமுதாயம் நிறைவு கொண்டிருப்பதாகவும் கூறிய அவர் நீண்டக்காலமாய் நிறைவு பெறாமல் இருந்த அப்பள்ளி சிக்கலுக்கு தீர்வுகாணப்படும் என கொடுத்த வாக்குறுதியை மடானி அரசு நிறைவேற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பல்லினம் வாழும் நாட்டில் எந்தவொரு இனமும் கல்வியில் பின் தங்குவிடக்கூடாத
எல்லாரும் தாய்மொழி கல்வியை கற்க உரிமைகொண்டவர்கள் என்பதை மீண்டும் நினைவுறுத்தும் வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இப்பள்ளியை திறந்து வைத்து அதனை பறைச்சாற்றியிருப்பதாக சிவகுமார் தெரிவித்தார்.
அன்றைய நிகழ்ச்சியில் கூட எந்தவொரு இனமும் அவர்கள் சார்ந்த உரிமையில் விடுப்பட மாட்டார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரதமரின் பேச்சு இருந்ததையும் சுட்டிக்காண்பித்த சிவகுமார் இந்தியர்களின் நலன் தொடர்ந்து காக்கப்படுவதற்கு இதுவொரு தக்க சான்று என்றார்.
மேலும்,2.4 ஹெக்டர் நிலப்பரப்பில் 12 அறைகள் கொண்ட ஈவூட் தமிழ்ப்பள்ளி வெ.13.19 மில்லியனில் கட்டி முடிக்கப்பட்டதாகவும்,இந்திய சமுதாயத்தின் கல்வி பயணத்தில் இது மற்றுமொரு மைல்கல் என்று பெருமிதம் கொண்டார்.
கல்வியில் இந்திய சமுதாயத்தின் நிலையையும் உரிமையையும் உயர்த்திடும் அதேவேளையில் பொருளாதார நிலையிலும் மடானி அரசாங்கம் தனித்துவ கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.அவ்வகையில்,இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக தெக்குன்,அமனா இஃக்தியார் போன்றவற்றின் துணையோடு ஏழ்மை நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அரசு வித்திடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர் இந்திய சமுதாயம் கல்வி,பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் மேம்பாடு ஆகியவற்றில் மடானி அரசாங்கம் தொடர்ந்து அதன் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டும் வருவதாக சிவகுமார் கூறினார்.இதன் வழி நாட்டு மக்களோடு இந்திய சமுதாயமும் வளமான நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதாகவும் நினைவுறுத்தினார்.

