
மலேசிய இந்துதர்ம மாமன்றம் சுங்கை சிப்புட் தாமான் துன் சம்பந்தன் அருள்நிலைய ஏற்பாட்டில் மாணவர்களுக்கான ஒருநாள் இந்துசமயக் கருத்தரங்கு ஹீ வூட் தமிழ்ப்பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் உள்ள எட்டு தமிழ்ப்பள்ளியில் இருந்து ஐந்தாம் ஆறாம் ஆண்டு மாணவர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.
வேர்களைப் பலப்படுத்துவோம் எனும் கருப்பொருளில் நடைபெற்ற இக்கருத்தரங்கு காலையில் மாணவர் பதிவுக்குப்பின் தொடங்கியது. இக்கருத்தரங்கு இந்து சேவை சங்கத்தின் திறன் வாய்ந்த பயிற்சியாளர்களால் நடத்தப்பெற்றது.
காலையில் பூஜையுடன் தொடங்கிய இக்கருத்தரங்கில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான இறைவழிபாட்டு முறைகள் போதிக்கப்பட்டன.
மந்திர ஜெபங்கள், தேவாரப் பாடல்கள், பஜனைப் பாடல்கள், கல்வியில் சிறந்து விளங்க மாணவர் கடைபிடிக்க வேண்டிய பயிற்சி முறைகள் போன்றவை பயிற்றுவிக்கப்பட்டன.
குழு முறையில் கலந்துரையாடல்கள், நுண்ணறிவு விளையாட்டுகள், கருத்தாடல்கள், பிரச்சனைக் களைவுகள் போன்ற தன்னாற்றலையும் தனித்திறனையும் வளர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எல்லா நடவடிக்கைகளிலும் மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
இக்கருத்தரங்கினை சுங்கை சிப்புட் ம.இ.கா தொகுதி காங்கிரஸ் தலைவர் வி. சின்னராசு நிறைவு செய்து வைத்தார். இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்த தாமான் துன் சம்பந்தன் அருள்நிலைய செயலவையினரைப் பாராட்டினார். இதுபோன்ற கருத்தரங்குகளை, சமய நடவடிக்கைகளை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக் கொண்டதோடு தனது முழு ஆதரவையும் தருவதாகத் தெரிவித்தார். கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாமன்ற தாமான் துன் சம்பந்தன் அருள்நிலைய தலைவர் பெருமாள் இராமசாமி வரவேற்புரை ஆற்றினார். இக்கருத்தரங்கு நடைபெறுவதற்கு முழு ஆதரவு வழங்கியதோடு இடவசதியையும் செய்து கொடுத்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஹீ வூட் பள்ளியின் சார்பில் உரையாற்றிய துணைத் தலைமையாசிரியர் குமாரி தனலட்சுமி இக்கருத்தரங்கின் கருப்பொருளான வேர்களைப் பலப்படுத்துவோம் எனும் தலைப்பு மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்.
பேரா மாநிலத் தலைவர் கிருஷ்ணன் சுப்பிரமணியம் மாமன்றம் மேற்கொண்டுவரும் சமய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுக் கூறினார். மாணவர்களை அனுப்பிய எல்லாப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் நன்றி கூறினார்.

