இறப்புக்குப் பின் தனது நல்லடக்கம் எம்முறையில் நடைபெற வேண்டுமென முன்கூட்டியே தமது குடும்பத்தாரிடம் தெரிவித்து, ஒப்புதல் வாங்கும் பாரத்தை மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை அறிமுகப்படுத்தியுள்ளதென அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
தமிழியல் சிந்தனையில் இருப்போர், தங்கள் குடும்பத்தில் பதிவு செய்யத் தவறும் போது அவர்களின் நல்லடக்கம் அவர்கள் விருப்பப்படி, தமிழர் முறைப்படி இருப்பதை இப்பாரம் உறுதி செய்யத் துணை நிற்கும் என்றார்.
தமிழின முன்னோர், மூதாதையர், அருளாளர் ஆகியோரின் அறிவுறுத்துதல்படியும் தமிழர் வாழ்வியல் வரலாற்றைப் பாதுகாக்கவும் தமிழர் பொது மரபு கரணங்களின் முறையில் தமது நல்லடக்கம் இருக்க வேண்டும்.
அவ்வடிப்படையில்,
- நல்லடக்கச் சடங்குகள் அனைத்தும் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
- தமிழர் மரபியல் முறைப்படி உடல் புதைக்கப்பட வேண்டும்.
- தொடர்ச்சியாக வரும் ஆதனாற்று மற்றும் ஆண்டு நினைவேந்தல் வழிபாடுகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே நிகழ்த்தப்பட வேண்டும்.
இதைத் தமிழியல் சமூக இயக்கங்களும் அமைப்புகளும் நடத்திக் கொடுக்க வேண்டுமென, மும்மொழி விளக்கத்தில் இருக்கும் மூன்று முகாமையான வேண்டுகோள் பாரத்தை மலேசியத் தமிழர்கள் படி எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் நாட்டிலுள்ள தமிழியல் சங்கங்கள், இயக்கங்கள், அமைப்புகளும் இதனை தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தித், தங்களின் உறுப்பினர் மற்றும் உறவுகளின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்றுமாறு பேரவை சார்பில் கேட்டுக் கொள்வதாக பாலமுருகன் வீராசாமி தெரிவித்துக் கொண்டார்.