கோலாலம்பூர் நவ 6-
மலேசிய இந்தியர்களில்
அதுவும் குறிப்பாக தமிழ்ச் சமூகத்துக்கு வழிகாட்டியாகவும் ஒழுக்க நெறிமுறைகளை, பண்பாட்டுக் கொள்கைகளை எடுத்துரைக்கும் உலக பொதுமறையான திருக்குறளை தமிழ்ப் பள்ளிகளில் ஒரு முக்கிய பாடமாக கண்டிப்பாக போதிக்கப் பட வேண்டும் .
மனிதன் மனிதனாக வாழ,
மனிதன் மனிதனுக்கு கூறிய
அறிவு புதையல் நூலான திருக்குறள் உலகின் ஒப்பற்ற வாலறிவு பேராசான் திருவள்ளுவர் பெருந்தகை அவர்களால் எழுதி வழங்கப் பெற்ற மறை நூல்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து நற்பண்பு கூறுகளையும் உள்ளடக்கிய வழிகாட்டியாக
அமைந்துள்ள பொது மறை திருக்குறளாகும்.
திருக்குறளானது நாடு, மொழி, இனம், சமயம் கடந்த எக்காலத்திற்கும், எல்லோருக்கும் பொருந்துவனாய் அமைந்துள்ளதால் திருக்குறள் உலகப் பொதுமறை என அன்று தொடங்கி இன்று வரை சிறப்பித்து அழைக்கப்பட்டு வருகிறது.
சங்க காலம் தொடங்கி மனித வாழ்வுக்கு தேவையான உயரிய நற்பண்புகளைக் கற்றுக்கொடுப்பதில் பல்வேறு நூல்கள் இருந்து வந்தாலும்,
திருக்குறளுக்கு நிகரான ஒரு படைப்பை காணுவது அரிதிலும் அரிது.
தமிழ்ச் சமூகத்தினர் மட்டுமின்றி உலக மக்களால் போற்றப்படும் திருக்குறளை தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவ செல்வங்களுக்கு நாள்தோறும் ஒரு முக்கிய பாடமாக பயிற்றுவிக்க வழிவகை செய்தால், மாணவர்கள் பண்புள்ளவர்களாகவும் நேர்மையாளர்களாகவும், சமூகத்தில் மதிக்கத் தக்க மனிதர்களாகவும் வருங்காலத்தில் திகழுவார்கள் என்பது
மறுக்க முடியாத உண்மை.
இளம் வயதிலேயே ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை பயிற்றுவிக்க கல்வி அமைச்சு காலம் கடத்தாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகப் பொதுமறை திருக்குறளின் நன்மதிப்பையும், பெருமையையும் மலேசிய பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நாடாளுமன்றத்தில் அதாவது மக்கள் மன்றத்தில் எடுதுரைத்ததே திருக்குறளுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய மணிமகுடம் ஆகும்.
இன்றைய சூழலில் பள்ளிகளில் திருக்குறளை ஒரு பாடமாக போதிப்பதின் வழி வருங்காலத்திற்கு தேவையான ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டிய அவசியமும் கடமையும் ஆசிரியர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் மற்றும் கல்வி அமைச்சுக்கு மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் இருக்கின்றது என்று அவர் வலியுறுத்தினார்.