
புத்ராஜெயா, நவ. 9- – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய மேலும் எட்டு நிரந்தர நிவாரண மையங்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா) தலைமை இயக்குநர் டத்தோ கைருல் ஷாரில் இட்ரூஸ் தெரிவித்தார்.
ஜோகூர் மாநிலத்தின் கோத்தா திங்கியில் உள்ள தாமான் கோத்தா ஜெயாவில் ஒரு மண்டபம் வெற்றிகரமாகப் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இந்த மண்டபம் கழிப்பறைகள் மற்றும் குளியலறை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 400 பேருக்கு இங்கு இடமளிக்க முடியும். இதன் முந்தைய கொள்ளளவு 190 பேராக மட்டுமே இருந்தது என்று அவர் கூறினார்.
இன்று பூலாவ் மெராந்தியில் உள்ள சிறப்பு மலேசிய பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு (ஸ்மார்ட்) தளத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழைக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கைருல் இதனைத் தெரிவித்தார்.
நிவாரண மையங்களை அமைப்பதற்கு சபா, சரவாக், கிளந்தான், திரெங்கானு, பினாங்கு, ஜோகூர் மற்றும் பேராக் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய இடங்களை நட்மா அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்

