
அஸ்டக்கா, ஜூலை 6-
மெக்சிகோவின் புகழ்பெற்ற அஸ்டெக்கா (Azteca) அரங்கில் இங்கிலாந்து அணி மெக்சிகோவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
சொந்த மண்ணில் விளையாடும் மெக்சிகோவை வீழ்த்த முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இறுதியில் 3-2 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
கடைசி நிமிடம் வரை ஆட்டத்தில் விறுவிறுப்பு குறையவில்லை.
முதல் நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டெக்லன் ரைஸுக்கு (Declan Rice) மஞ்சள் அட்டை. ஆனால் தாக்குப் பிடித்தது இங்கிலாந்து.
ஆட்டத்தின் முற்பாதியில் இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம் (Jude Bellingham) இரண்டு கோல்களை அடித்தார்.
36ஆவது, 38ஆவது நிமிடங்களில் அவர் இரு கோல்களைப் புகுத்தி அசத்தினார்.
ஆனால் மெக்சிகோ விரட்டி விரட்டி விளையாடியது.
42ஆவது நிமிடத்தில் ஜூலியன் கியினோனெஸ் (Julian Quinones) மெக்சிகோவின் முதல் கோலைப் போட்டார்.
பிற்பாதி தொடங்கியதும் 54ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் தற்காப்பு வீரர் ஜரெல் குவான்ஸாவுக்குச் (Jarrell Quansah) சிவப்பு அட்டை கிடைத்தது.
இதனால் 10 வீரர்களுடன் இங்கிலாந்து சமாளித்தது.
60ஆவது நிமிடத்தின் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் (Harry Kane) 3ஆவது கோலை அடித்தார்.
இருப்பினும் 69ஆவது நிமிடத்தில் மெக்சிகோவுக்கு ராவுல் ஹிமெனெஸ் (Raul Jimenez) 2ஆவது கோல் போட்டார்.
இறுதியில் இங்கிலாந்து பத்து பேருடன் விளையாடி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு நான்கு மஞ்சள் அட்டையும் மெக்சிகோ அணிக்கு 2 மஞ்சள் அட்டையும் கிடைத்தது.
அடுத்த வாரத்தில் கால் இறுதி சுற்றில் இங்கிலாந்து – நார்வே அணிகள் மோதுகின்றன.

