புத்ரா ஜெயா நவ. 9 அடுத்த ஆண்டு ஆசியான் தலைவர் பதவியை மலேசியா ஏற்பதை முன்னிட்டு பெண் தொழில் முனைவோருக்கான விழாவை ஏற்று நடத்த தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு தொழில் முனைவோர் தங்கள் உற்பத்திப் பொருள்களை விளம்பரப்படுத்தவும்அதன்மூலம் அதிக வருமானம் ஈட்டவும் இந்த விழா உதவும் என்று துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.இரமணன் கூறினார்.
நாம் ஆசியான் தலைவராக ஆகவுள்ள நிலையில் நிச்சயமாக பல வெளிநாட்டு பிரதிநிதிகள் இங்கு வருவார்கள்.
எனவே வர்த்தகர்கள் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் பெண் தொழில்முனைவோரின் விழாவை ஏற்பாடு செய்ய நாங்கள் பரித்துரைக்கிறோம்.
அதே நேரத்தில், இந்த முயற்சியால் வெளிநாடுகளுக்கு வர்த்தகர்களை அழைத்துச் சென்று தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கான செலவைக் குறைக்க முடியும்.
இந்த விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு மற்ற அமைச்சுகள் மற்றும் பிரதமருடன் இது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
நேற்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் 2024ஆம் ஆண்டு மலேசிய பெண் தொழில்முனைவோர் விழாவைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.