
ரவாங், நவ. 20- சட்டமன்ற உறுப்பினரின் ஒரு கையெழுத்து ஒரு
உயிரைக் காக்க உதவியிருக்கிறது.
அந்த உதவிக்காக அந்த சட்டமன்ற
உறுப்பினருக்கு கிடைத்த பரிசு ‘நன்றி‘ என்ற விலை மதிக்க முடியாத
வார்த்தை.
எப்போதோ செய்த உதவியை மறவாமல் நினைவில் மாது ஒருவர் நன்றி
கூறிய அந்த நிகழ்வை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்
ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட்.
கடந்த சனிக்கிழமை ரவாங் கன்றி ஹோம்ஸில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பின் போது தன்னைச் சந்தித்த அந்த மாது “என் மகனுக்கு உதவியதற்கு நன்றி“ எனக் கூறியதைக் கேட்டு தாம் வியப்படைந்ததாக அவர் கூறினார்.
“என் மகனுக்கு உதவியதற்கு நன்றி ஒய்.பி.“ என அந்த மாது என்னிடம்
கூறினார்.
“ஓ.. பரவாயில்லை எனக் கூறிய நான் என்ன உதவி செய்தேன்?“
என அவரிடம் வினவினேன்.
“நீங்கள் செய்த மருத்துவ உதவியால் நான் மருத்துவரைச் சந்திப்பதற்கு
வாய்ப்பு கிட்டியது“ என அவர் பதிலளித்தார்.
“எவ்வளவு தொகைக்கு நான்
கையெழுத்திட்டேன்“ என அவரிடம் மீண்டும் கேட்டேன்.
ஏனென்றால், நான் அடிக்கடி இத்தகைய உதவிக்கான விண்ணப்பங்களில்
கையெழுத்திடுவதால் அதில் குறிப்பிடப்படும் தொகையை நினைவில்
வைத்துக் கொள்வதில்லை.
அதனால் சில நூறு வெள்ளியாக இருக்கும் என
மனதில் நினைத்துக் கொண்டேன்.
“என் மகன் இப்போதுதான் ஐ.ஜே.என்.னில் (தேசிய இருதய சிகிச்சைக்
கழகம்) சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
அறுவை சிகிச்சைக்கான
செலவு 50,000 வெள்ளி. உங்களின் ஒரு கையெழுத்தினால் அனைத்து
செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டது“ என்று அவர்
பதிலுரைத்தார்.
ஆறே வயது நிரம்பிய அச்சிறுவன் இருதய நோயால்
பாதிக்கப்பட்டிருந்தான்.
சிலாங்கூர் மாநில அரசின் மருத்துவ உதவித் திட்டத்தின்
வாயிலாக அச்சிறுவன் கடந்த மாதம் அறுவை சிகிச்சையை
வெற்றிகரமாக முடித்து தற்போது குணமடைந்து வருகிறான்.
எனக்கு மிகவும் மனநிறைவாக உள்ளது. எங்களின் முயற்சி ஒரு சிறுவனின்
உயிரைக் காப்பாற்றியுள்ளது.
இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை என்னிடம்
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அக்குடும்பத்தைச் சேர்ந்த
அனைவரும் என்னைத் தேடி வந்தது கண்டு மிகவும் மனம் நெகிழ்ந்து
போனேன்.
நாம் நன்றி கூறவும் உதவியைப் போற்றவும் கற்றுக் கொள்வோம்.
அப்போதுதான் மிதமான நிலையிலும் மகிழ்ச்சியை உணர முடியும் என
சுவா தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.