மருத்துவக் காப்புறுதி உயர்வு சுமையளிக்கும் வகையில் இல்லாதிருப்பது உறுதி செய்யப்படும் – பிரதமர் !

கோலாலம்பூர், டிச. 10 – மருத்துவக் காப்புறுதிக்கான பிரீமியத் தொகை
அபரிமித உயர்வு காணாமலிருப்பதை உறுதி செய்வதற்கான
நடவடிக்கைகளை பேங்க் நெகாரா மலேசியாவும் சுகாதார அமைச்சம்
மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மருத்துவக் காப்புறுதிக்கான பிரீமியத் தொகையின் அதிகப்பட்ச
உயர்வினால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுவதையும் பண வீக்கத்திற்கு
வழி வகுப்பதையும் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர்
சொன்னார்.

பிரீமியத் தொகையை உயர்த்துவதற்கு முன்னர் காப்புறுதி நிறுவனங்களும்
தக்காபுல் நடத்துநர்களும் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்வதை
உறுதி செய்ய கடுமையான விதிமுறைகளை வரைவது குறித்து கருவூலம்
மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து பேங்க் நெகாரா பரிசீலித்து
வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

காப்புறுதி நிறுவனங்கள் கூறுவது போல் மலேசியாவில் காணப்படும்
குறைந்த கட்டண வரம்பு மற்றும் மருத்துவச் சேவை மற்றும்
சிகிச்சைக்கான செலவினம் அதிகரிப்பு ஆகியவை இந்த பிரீமியத் தொகை
உயர்வுக்கான காரணங்களாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும் அந்த கட்டண உயர்வு நியாயமானதாகவும் பொது மக்களுக்கு
சுமையளிக்காத வகையிலும் இருப்பதை உறுதி செய்ய சுகாதார
அமைச்சும் பேங்க் நெகாராவும் திட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றன
என்று மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர்
குறிப்பிட்டார்.

மருத்துவக் காப்புறுதிக்கான பிரீமியத் தொகை 40 முதல் 70 விழுக்காடு
உயர்வு கண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கூலாய் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் சுஹைஸான் கையாட் பிரதமரிடம் கேள்வியெழுப்பிருந்தார்.

மருந்துகள் மற்றும் புதிய மருத்துவ சாதனங்களின் விலை அதிகரிப்பு
சம்பள உயர்வு ஆகியவை மருத்துவச் செலவின அதிகரிப்புக்கு காரணமாக
உள்ளதாகப் பிரதமர் கூறினார்.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles