
சுங்கை,டிச 10-
நம் நாட்டில் மட்டுமின்றி உலகளாவிய நிலையிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகளும் வெற்றிகளும் பிரமிப்பாக இருக்கும் நிலையில் அப்பள்ளிக்கும் அப்பள்ளி மாணவர்களுக்கும் எங்களின் சேவையும் பங்களிப்பும் எல்லா காலங்களிலும் தொடரும் என பீடோர் தகான் முன்னாள் குடியிருப்பாளர் சங்கத்தின் ஆலோசகரும் கல்வியாளருமான திரு.முரளி குறிப்பிட்டார்.
நம் சமுதாயத்தின் வாழ்வியல் உயர்வும் மேம்பாடும் கல்வியிலிருந்தே தொடங்குவதாகவும் குறிப்பிட்ட அவர் கல்விதான் நன் சமுதாயத்தின் உருமாற்றத்தின் அடித்தலம் என்றும் கூறினார்.
சாதிக்க நகர்புறம்,புறநகர் பள்ளிகள் என்னும் வேறுபாடு இல்லையென்றும் நினைவுறுத்திய அவர் புறநகர் தமிழ்ப்பள்ளிகள்,குறிப்பாக தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகள் சிறப்பிற்குரியதாக அமைந்திருப்பதாக கூறினார்.
இவ்வட்டாரத்திலிருக்கும் தோட்டப்புறப் பள்ளி மாணவர்களுக்கு சுமார் 16ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் புதிய தவணை தொடங்கும் போது அம்மாணவர்களுக்கு பள்ளிச்சீருடை,உபகராணங்கள் ஆகியவை வாங்குவதற்கான மொத்த செலவினத்தை இக்குடியிருப்பாளர் சங்கம் Nurture of Beloved Community (NOBC) இயக்கத்தின் ஆதரவோடு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாணவர்களுக்கு பள்ளிச்சீருடைக்கான பற்றுச்சீட்டுகளை வழங்கி பெற்றோர்களின் சுமையை குறைத்த அதேவேளையில்,ஏழ்மை நிலை குடும்பங்களை அடையாளம் கண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் அவர்கள் வழங்கினார்கள்.
இம்முறை சுங்கை தோட்டம்,பீக்கம் தோட்டம் மற்றும் சுங்கை குரூயீட் தோட்டம் ஆகிய மூன்று தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவ்வுதவிகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் முன்னெடுக்கும் இம்முயற்சிக்கு பெரும் பக்கபலமாக திகழும் என்.ஓ.பி.சி இயக்கமும் அதன் தலைவர் மதிப்புமிகு எட்மண்ட் அவர்களுக்கு இவ்வேளையில் நன்றி கூறுவதாக குறிப்பிட்ட முரளி தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகள் மீது நாங்கள் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு அவர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றார்.
முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய எட்மண்ட் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியிலும் மாணவர்களின் மேம்பாட்டிலும் நாங்களும் சிறு பங்களிப்பை செய்வதை எண்ணி மகிழ்வதாக கூறினார்.
தோட்டப்புற மாணவர்கள் ஒருபோதும் கல்வியில் பின் தங்கிடக்கூடாது.அதனை நிவார்த்தி செய்யும் வகையில் தான் தொடர்ந்து நாங்கள் இம்மாதிரியான பங்களிப்பையும் ஆதரவையும் செய்து வருவதாக கூறினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய எட்மண் கல்வி என்பது எல்லா மனித சமூகத்திற்கு உரியது எனவும் இதில் ஏற்றம் தாழ்வு இருத்தல் கூடாது எனவும் குறிப்பாக தோட்டப்புற மாணவர்கள் தங்களின் கல்வி பயணத்தில் ஒருபோதும் பின் தங்கிவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.
தோட்டப்புற மாணவர்கள் எந்த தடையும் இன்றி கல்வி கற்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு எனவும் கூறிய அவர் அவ்வகையில் இந்த நான்கு பள்ளிகளுக்கும் நாங்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருவதில் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.
மேலும்,தமிழ்ப்பள்ளி மாணவர்களின் குறிப்பாக தோட்டப்புற மாணவர்களின் கல்வி அடைவுநிலையும் இதர அடைவுநிலைகளும் வியக்கத்த நிலையில் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருவதாகவும் அவ்வகையில் இந்த நான்கு பள்ளிகளின் சாதனைகளும் அடைவுநிலையும் கூட எங்களை பெருமிதப்படுத்துவதாக கூறினார்.
அச்சாதனைகளில் நாங்களும் பங்கெடுப்பதை பெருமையாகவே கருதுகிறோம் எனவும் தெரிவித்தார்.
கடந்தக் காலங்களில் இவ்வட்டார தமிழ்ப்பள்ளிகளுக்கு தளவாடப் பொருட்கள்,கணினி உட்பட பல்வேறு தேவைகளையும் இவ்வியக்கம் நிறைவு செய்துள்ளதோடு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு பள்ளிச்சீருடைக்கான பற்றுச்சீட்டு வழங்குவதையும் பெரும் கடமையாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் கேட்காமல் வட்டார தோட்டப்புறப் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் ஏழ்மை நிலை குடும்பங்களுக்கும் உதவிடும் இவ்வியக்கங்களுக்கும் அதனை ஒருங்கிணைத்து செழிமையுற சேவையாய் செய்துவரும் பீடோர் தகான் முன்னாள் குடியிருப்பாளர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் என்.ஓ.பி.சி இயக்கத்தினர் என அனைத்து தரப்பிற்கு அப்பள்ளிகளை சார்ந்த தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்களும் நன்றியினை பதிவு செய்து கொண்டனர்.

