
கோலாலம்பூர், மே 15 –
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் (MACC) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கியைச் சுற்றியுள்ள பங்கு சர்ச்சை தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.
இதன் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்றார்.
ஆசிய வங்கியாளர் உச்சிமாநாடு 2026 மாநாட்டின்போது The Edge ஊடகத்திடம் பேசிய அவர், சட்டத்துறை தலைமை அதிகாரி டான்ஸ்ரீ மொஹ்த் துசுக்கி மொக்தார் தலைமையிலான விசாரணைக் குழு தனது ஆய்வை நிறைவு செய்து அமைச்சரவைக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும், அரசின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மேற்கொண்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு இதுவரை தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

